பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவிற்கு செயல் தலைவர் நியமிப்பு!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது சபையில் பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவிற்கு செயல் தலைவர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவிற்கு பதில் தலைவரை நியமிக்க முடியாது எனத் தெரிவிக்கின்றார்.
பொது நிதிக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக இருப்பதால், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நிரந்தர தலைவராக நியமிப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் கிரியெல்ல சுட்டிக்காட்டினார்.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுவில் பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் பதவிக்கு கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயரைப் பிரேரித்ததாகத் தெரிவித்த லக்ஷ்மன் கிரியெல்ல, தெரிவுக்குழு தனது பிரேரணைக்கு அமைய செயற்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தெரிவுக்குழுவின் கூட்டம் இன்றோ அல்லது நாளையோ இடம்பெறும் என்பது தமக்கு தெரியாது எனவும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொது நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவிற்கு ஆளும் கட்சியால் முன்மொழியப்பட்ட கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவுக்குழுவினால் அண்மையில் நியமிக்கப்பட்டார்.
அதன் போது தலைவர் பதவிக்கு கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயர் சமகி ஜன பலவேகயவினால் முன்மொழியப்பட்டது.
இந்தக் குழுவின் தலைவராக மயந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டமைக்கு சமகி ஜன பலவேகய கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வேண்டுகோளுக்கு இணங்க திஸாநாயக்க அந்த பதவியை இராஜினாமா செய்தார்.



