விசேட பண்ட - சேவை வரி சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றின் தீர்மானம் அறிவிப்பு!

விசேட பண்ட மற்றும் சேவை வரி சட்டமூலத்தின் பல சரத்துகள் இலங்கையின் அரசியல் அமைப்புடன் ஒத்திசையவில்லை என்று உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் பிரஸ்தாபித்துள்ளது.
இந்த சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிந்த மனுக்களின் அடிப்படையில், உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தை சபாநாயகருக்கு அனுப்பி இருந்தது.
குறித்த வியாக்கியானத்தை சபாநாயகர் இன்று (22) நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் அறிவித்தார்.
இதன்படி இந்த சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியல் அமைப்புடன் ஒத்திசையாத நிலையில், அவற்றை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதாக இருந்தால், சபையின் அனைத்து உறுப்பினர்களின் 3 இல் 2 பெரும்பான்மை தேவை.
அல்லது பொதுசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் அவற்றை நிறைவேற்ற முடியும்.
எவ்வாறாயினும், இதன் நடைமுறை சாத்தியம் கருதி யோசனை முன்வைத்துள்ள உயர்நீதிமன்றம், அரசியல் யாப்புடன் ஒத்திசையாத சரத்துகளை மாத்திரம் திருத்தி, அரசியல் அமைப்புடன் இசைய செய்து, அதனை நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியும் என்று தமது வியாக்கியானத்தில் குறிப்பிட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.



