பிஜி நாட்டில் லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலி காய்ச்சல் பரவலால் 11 பேர் உயிரிழப்பு

பிஜி நாட்டில் லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலி காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளது. நடப்பு ஆண்டின் ஜனவரியில் இருந்து மொத்தம் 74 பேருக்கு இதன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுபற்றி அந்நாட்டின் சுகாதாரத்திற்கான நிரந்தர செயலாளர் ஜேம்ஸ் பாங் இன்று கூறும்போது, கடந்த ஒன்றரை மாதங்களில் எலி காய்ச்சலுக்கு 11 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். அவர்களில் பலர் 16 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர் என தெரிவித்து உள்ளார்.
இந்த எலி காய்ச்சல் நோயானது பாக்டீரியாவால் ஏற்படுகிறது. தோல் அல்லது மூக்கு, கண், வாய் ஆகியவற்றின் வழியே உடலுக்குள் இந்த பாக்டீரியாவானது நுழைந்து பாதிப்பு ஏற்படுத்த தொடங்குகிறது. வெள்ளநீர் போன்ற மாசடைந்த நீரால் இந்த எலி காய்ச்சலானது தீவிரமுடன் பரவ தொடங்குகிறது.
பசிபிக் தீவு நாடுகளில், கோடை காலங்களில் ஏற்படும் அதிகளவிலான மழைப்பொழிவு மற்றும் தொடர்ச்சியான வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் எலி காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உயருகிறது.



