பல நிதியங்களின் இலாபம் மீது 25% வரி விதிக்க அரசாங்கம் திட்டம்
நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தினரின் பணத்தினால் அமைக்கப்பட்டுள்ள ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF), வர்த்தக சேவைகள் சேமலாப நிதியம் (MSPS) உள்ளிட்ட பல நிதியங்களின் இலாபம் மீது 25% மிகைக்கட்டண வரியினை விதிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருகின்றது.
இந்த நடவடிக்கை மூலம் ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து மாத்திரம் 65 பில்லியன் ரூபாவை நீக்கிக்கொள்வதற்கான சந்தர்ப்பம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
மிகைக்கட்டண வரி என்ற பெயரில் அரசாங்கம் புதிய சட்டமூலமொன்றை வர்த்தமானியில் அறிவித்துள்ளதுடன், எதிர்காலத்தில் அது நிறைவேற்றப்படவுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பமாகும் வரி மதிப்பீட்டு ஆண்டுக்காக 2000 மில்லியன் ரூபாவை விஞ்சும் தனி நபர்கள், பங்குடைமை அல்லது நிறுவனங்களிடம் 25% மிகைக்கட்டண வரியை அறவிட வேண்டும் என சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது ஒரு தடவை மாத்திரம் அறவிடப்படவுள்ள மிகைக்கட்டண வரியாகும்.
மிகைக்கட்டண வரி சட்டமூலத்திற்கு அமைய, நிறுவனங்கள் என்பதற்கான பொருட்கோடல் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அர்த்தத்திற்கு அமைவானதாக கொள்ளப்படவேண்டும்.
உள்நாட்டு இறைவரி சட்டத்தின் பொருட்கோடலுக்கு அமைய, ஓய்வூதிய நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் அல்லது அதற்கு நிகரான நிதியங்களும் நிறுவனம் என்ற வகைப்படுத்தலின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், வர்த்தக சேவைகள் சேமலாப நிதியம் உள்ளிட்ட பல நிதியங்களின் இலாபத்தில் 25% மிகைக்கட்டண வரியை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.