வயிற்று தசையை உறுதியாக்கும் உபவிஸ்த கோணாசனம்

Prasu
2 years ago
வயிற்று தசையை உறுதியாக்கும் உபவிஸ்த கோணாசனம்

வடமொழியில் ‘உபவிஸ்த’ என்றால் ‘அமர்ந்த’ என்றும் ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். உபவிஸ்த கோணாசனம் ஆங்கிலத்தில் Wide Legged Seated Forward Fold என்றும் Wide Angle Seated Forward Bend என்றும் அழைக்கப்படுகிறது.

உபவிஸ்த கோணாசனத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், குரு, ஆக்ஞா மற்றும் சஹஸ்ரார சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இவ்வாசனத்தைத் தொடர்ந்து பயின்று வர சக்கரங்களின் இயக்கம் மேம்பட்டு உடல் நலம் பாதுகாக்கப்படும்.

பலன்கள்

முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையயையும் உறுதியையும் அதிகரிக்கிறது. முதுகுத் தசைகளை வலுவாக்குகிறது. கழுத்துத் தசைகள் உறுதியாக்குகிறது

இடுப்புப் பகுதியை பலப்படுத்துகிறது; இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. வயிற்று உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

வயிற்று தசைகளை உறுதியாக்குகிறது. அடி முதுகு வலியைப் போக்குகிறது. கால்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு கால்களைப் பலப்படுத்தவும் செய்கிறது. சிறுநீரகங்களின் இயக்கத்தைச் செம்மையாக்குகிறது. மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதோடு மாதவிடாய் காலத்து வலிகளைப் போக்கவும் உதவுகிறது.

சையாடிக் வலியைப் போக்க உதவுகிறது. மூட்டுக்களைப் பலப்படுத்துகிறது. தூக்கமின்மையைப் போக்குகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது

செய்முறை

விரிப்பில் அமர்ந்து கால்களை நேராக நீட்டவும். கால்களை பக்கவாட்டில் விரிக்கவும். கால்களை விலக்கும் போது கால் முட்டியும் கால் விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும். மூச்சை உள்ளிழுத்து உள்ளங்கைகளை முன்னால் உள்ள தரையில் வைக்கவும்.

மூச்சை வெளியேற்றியவாறு முன்னால் குனியவும். முன்னால் குனியும் போது கைகளைப் பாதங்களை நோக்கி நீட்டவும். மெதுவாக முன்னால் குனிந்து கால் பெருவிரல்களைப் பிடித்து நெற்றியைத் தரையில் வைக்கவும். 20 வினாடிகள் இந்நிலையில் இருக்கவும்.

மூச்சை உள்ளிழுத்தவாறு கால் பெருவிரல்களை விடுவித்து நிமிர்ந்தவாறு கைகளைத் தரையில் வைக்கவும். கால்களை அருகருகே வைத்து ஆரம்ப நிலைக்கு வரவும்.

குறிப்பு

தீவிர முதுகுத் தண்டு கோளாறு, தீவிர முதுகுப் பிரச்சினை மற்றும் இடுப்புப் பிரச்சினை உள்ளவர்கள் உபவிஸ்த கோணாசனம் செய்வதைத் தவிர்க்கவும்.

மேலும் பல ஆரோக்கிய தகவல்களை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.