எலியால் தைவானில் ஏற்பட்டுள்ள பாதிப்பு!

தைவானில் (Taiwan) உள்ள அகாடமியா சினிகா (Academia Sinica) உயர் பாதுகாப்பு மிக்க மரபணு ஆராய்ச்சி ஆய்வகம். அந்நாட்டில் உள்ள 18 உயிரியல் பாதுகாப்பு ஆய்வகங்களில் நிலை 3-ல் இருக்கக்கூடிய இந்த ஆய்வகத்தில் நோய்க்கிருமிகளை சேகரித்தல், செல் அடிப்படையிலான நுண்ணுயிரியல் மற்றும் நோய் எதிர்ப்பு சோதனைகள், சிறிய விலங்கு மாதிரிகளில் தடுப்பூசிகள் மற்றும் துணை மருந்துகளின் செயல்திறனை மதிபீடு செய்தல் உள்ளிட்ட ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்த கொரோனாவின் வேரியண்டுகளை மதிப்பிடும் வகையிலான ஆராய்ச்சியும் அந்த ஆய்வகத்தில் நடைபெற்று வந்தது. அதற்காக, கெரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட எலியைக் கொண்டு ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள், அதன் பரவும் தன்மை உள்ளிட்டவைகள் குறித்த தரவுகளையும் சேகரித்து வந்தனர். இந்நிலையில், அந்த ஆய்வகத்தில் பணியாற்றி 20 வயது பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலை 2 என்ற உயரிய பாதுகாப்பில் இருக்கும் ஆய்வகத்தில் இருந்த பெண்ணுக்கு கொரோனா பாசிடிவ் வந்திருப்பது ஆய்வாளர்களிடையேவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக தகவலில், அந்தப் பெண்ணை கொரோனா பாதித்த எலி கடித்ததால், கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதேநேரத்தில் எலி கடித்ததன் மூலம் வைரஸ் பரவியதா? அல்லது வேறு ஏதேனும் வழியில் வைரஸ் தொற்று ஏற்பட்டதா? என்பது குறித்து இன்னும் ஆய்வு செய்யப்பட வேண்டியிருப்பதாக அகாடமியா சினிகா ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் வைரஸ், டெல்டா வேரியண்டாக இருக்கலாம் எனக் கூறியுள்ள ஆய்வாளர்கள், இதன் மூலம் நாடு முழுவதும் அடுத்த அலை உருவாகும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர். தைவான் சுகாதாரத்துறை அமைச்சர் சென் ஷிங்கும் இதனை ஒப்புக்கொண்டார். இது குறித்து விளக்கம் அளித்த அவர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்ககூடிய பெண், மார்டெனாவின் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தியிருப்பதாகவும், வெளிநாடுகளுக்கு இதுவரை செல்லவில்லை எனவும் கூறினார்.
உலகளவில் டெல்டா வேரியண்ட் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம் எனத் தெரிவித்துள்ள அவர், முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார். ஆய்வகத்தில் அந்தப் பெண்ணுடன் தொடர்புடைய சக ஊழியர்கள் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 80 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அனைவருக்கும் நெகடிவ் ரிசல்ட் வந்துள்ளதாக கூறப்படுகிறது.



