சிரியாவின் துயரங்களை ஒற்றை புகைப்படத்தில் விளக்கிய புகைப்படக்காரருக்கு விருது

சிரியாவில் போரினால் ஏற்படும் துயரங்களை ஒற்றை புகைப்படத்தால் விளக்கிய புகைப்படக்காரருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. வருடாந்திர சர்வதேச சியன்னா புகைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. துருக்கியில் தஞ்சமடைந்துள்ள சிரிய அகதிகளைப் புகைப்படமாக்கிய துருக்கி நாட்டைச் சேர்ந்த புகைப்படக்காரர் மெஹ்மத் அஸ்லானிற்கு சிறந்த புகைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டது.
வாழ்வின் துயரங்கள் என தலைப்பிடப்பட்ட அந்த புகைப்படத்தில் சிரியாவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் காலை இழந்த தந்தை ஊன்றுகோலைப் பிடித்தபடி கை, கால்கள் இல்லாமல் பிறந்த தன் குழந்தையைத் தூக்கி கொஞ்சுகிறார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைக்கிறார்கள். அந்த தந்தை சிரிய நாட்டின் இட்லிப் பகுதியைச் சேர்ந்த முன்சிர் என்பதும் அவருடைய மகனின் பெயர் முஸ்தஃபா என்பதும் தெரியவந்துள்ளது.
இட்லிப்பை விட்டு நீங்கி தற்போது முன்சிரின் குடும்பம் சிரிய எல்லையில் அருகே தெற்கு துருக்கி பகுதியில் வசித்து வருகிறார்கள்.குழந்தை பிறக்கும்போதே அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் கை, கால்கள் இல்லாமல் பிறந்துள்ளார்.
சிரிய போரின்போது ஏற்பட்ட பாதிப்பால் முஸ்தஃபாவின் தாயார் சைனப் மருந்துகளை உட்கொண்டுள்ளார். அதன் காரணமாகவே குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தம்பதி பலரிடமும் செயற்கை கை கால்களை வாங்குவதற்கான உதவிகளைக் கோரியுள்ளனர்.இதையடுத்து விருது வென்ற இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.



