வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்ல காத்திருப்பவர்களுக்கு மீண்டும் சிக்கல்?

மிகவும் ஆபத்தான உருமாறிய சி.1.2. வைரஸ் காணப்படும் நாடுகளில் இருந்து பயணிகள் இலங்கை வருவதற்கு அனுமதிக்ககூடாது என இலங்கை ஆராய்ச்சி பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த வைரஸ் காணப்படும் பல நாடுகளில் இருந்து பயணிகள் இலங்கை வருவதற்கு ஜனாதிபதி தடைவிதிக்கவேண்டும் என இலங்கை ஆராய்ச்சி பேரவையின் தலைவர் ஹேமந்த தொடம்பகல இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகங்களின்படி இந்த மாறுபாடு என்பது ஸ்பைக் புரதத்தின் சி.1.2 வரிசையில் திரட்டப்பட்ட பல பிறழ்வுகளின் விளைவாகும் என தெரிவித்துள்ள அவர் வுகானில் அடையாளம் காணப்பட்ட வைரசினை விட இது வித்தியாசமானது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் 13 ம் திகதி வரை சீனா கொங்கோ மொறீசியஸ் நியுசிலாந்து போர்த்துக்கல் உட்பட பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அவர்தெரிவித்துள்ளார்.
புதிய கொவிட் மாறுபாடு தற்போதுள்ள அனைத்து மாறுபாடுகளையும் விட அதிக பிறழ்வுகளை கொண்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் இது அதிகளவு தொற்றும் தன்மையை கொண்டுள்ளது தடுப்பூசிகளால் வழங்கப்படும் பாதுகாப்பிலிருந்து இது தப்புகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவில் மே மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அந்த நாட்டில் மூன்றுவீதம் பரவியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து வந்த நபர் ஒருவர் காரணமாகவே தெமட்டகொடையில் டெல்டா வைரஸ் பரவத்தொடங்கியது என குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சி பேரவையின் தலைவர் ஹேமந்த தொடம்பகல புதிய வைரஸ் காணப்படும் நாடுகளில் இலங்கைக்கு வருவதை தடுப்பது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கையினால் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



