ஸ்பெயினுக்கு அருகே 7,000 தொன் டீசலுடன் எண்ணெய்க் கப்பல் மூழ்கியது! – ஒருவர் பலி, ஆறு பேர் காயம்

#Treatment #world_news #Oil #environment #Tank #Emergancy
Abi
40 minutes ago
ஸ்பெயினுக்கு அருகே 7,000 தொன் டீசலுடன் எண்ணெய்க் கப்பல் மூழ்கியது! – ஒருவர் பலி, ஆறு பேர் காயம்

ஸ்பெயினின் இபிசா தீவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் சுமார் 7,000 தொன் டீசல் எரிபொருளை ஏற்றிச் சென்ற எண்ணெய்க் கப்பல் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இபிசா தீவின் கரையிலிருந்து சுமார் 46 கிலோமீற்றர் தொலைவிலும், வலென்சியாவிலிருந்து 57 கடல் மைல் தொலைவிலும் இடம்பெற்றுள்ளது. மால்டா நாட்டின் கொடியுடன் பயணித்த 'Med Emre' என்ற எண்ணெய்க் கப்பலில் 17 பணியாளர்கள் இருந்துள்ளனர்.

கப்பல் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகளில் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்களில் ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பலேரிக் தீவுகளின் அவசர சேவைகள் உறுதிப்படுத்தியுள்ளன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏனைய ஆறு பேருக்கும் தாழ்வெப்பநிலை உள்ளிட்ட சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஸ்பெயின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், குறித்த கப்பல் மூழ்கியதன் காரணமாக கடல் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் அதிகாரிகள் மதிப்பீடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, கப்பலில் இருந்த 7,000 தொன் டீசல் எரிபொருளில் ஏதேனும் கடலில் கசிந்துள்ளதா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பலேரிக் தீவுகளின் தலைவர் மார்கா புரோஹென்ஸ், எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து போதிய தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

 கப்பல் விபத்தால் கடல் மாசுபாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!