உங்கள் அன்பிற்கு நன்றி!” – திருமண வாழ்த்துகளுக்கு அனிருத் நெகிழ்ச்சிப் பதிவு
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத், தனது திருமணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அனிருத் மற்றும் சன் நெட்வொர்க் நிறுவனத்தின் செயல் இயக்குநரும் தொழிலதிபருமான காவ்யா மாறன் ஆகியோருக்கு கடந்த நவம்பர் 11ஆம் திகதி கிரீஸில் திருமணம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய நாளான நவம்பர் 10ஆம் திகதி இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.
இந்தத் திருமண நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமணப் புகைப்படங்களை அனிருத் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, அவை இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்றன.
இந்நிலையில், தனது எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் உள்ளங்கள் நிறைவாக உள்ளன.
உங்கள் அன்பும் ஆசீர்வாதங்களும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு எங்களுக்கு மதிப்புமிக்கவை.
எங்களின் புதிய தொடக்கத்தை மேலும் சிறப்பாக்கியதற்கு நன்றி.
உங்கள் அன்பு முழுவதையும் நாங்கள் எங்களுடன் சுமந்து செல்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.