இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 50 வீதம் அதிகரிப்பு – மருத்துவர்கள் எச்சரிக்கை!
இலங்கையில் கடந்த 2010 முதல் 2020 வரையான காலப்பகுதியில் நுரையீரல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தேசிய சுவாச நோயியல் நிறுவனத்தின் நிபுணத்துவ வைத்தியர் சமன் இத்தாகொட, சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரிடையேயும் இந்நோயின் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், புகைபிடிக்காத பெண்களிடையேயும் நுரையீரல் புற்றுநோய் பதிவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, நுரையீரல் புற்றுநோய்களில் சுமார் 90 சதவீதம் புகைப்பிடித்தலுடன் தொடர்புடையவை என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டாம் நிலை புகைப்பிடித்தல், காற்று மாசுபாடு, விறகு மற்றும் மண்ணெண்ணெய் அடுப்புகளிலிருந்து வெளியாகும் புகை, அஸ்பெஸ்டாஸ் மற்றும் சிலிக்கா போன்ற காரணிகளும் நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.