திறந்த பிடியாணை பிறப்பிக்கவில்லை சாரா ஜஸ்மினுக்கு -முஜிபுர் ரஹ்மான் கேள்வி?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றவாளியான சாராஜஸ்மின் இறக்கவில்லை.
அப்படியென்றால் அவர் தப்பித்துச் சென்றுள்ளார். இவ்வாறு இருக்க அவருக்கு ஏன் நீங்கள் திறந்த பிடியாணை பிறப்பிக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மொழி முல வினாக்களின் போது மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தொடர்பில் சாராஜஸ்மின் தொடர்பாக 2020 ஆம் ஆண்டின் பின்னர் கோட்டபாஜ ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்குழு தெரிவிக்கின்ற விடயம் சாரா ஜஸ்மின் இறந்துள்ளார் என்பது.
ஆனால் அனைவருக்கும் தெரியும் சாராஜஸ்மின் இறக்கவில்லை. அவர் தப்பித்துச் சென்றுள்ளார். அவர் தப்பித்துச் செல்ல ஏதேவொரு குழு உதவியுள்ளது.
சாராஜஸ்மின் இறக்கவில்லை என்பதை உங்களுடைய அரசாங்கமும் ஏற்றுக்கொண்டது. அவர் இந்தியாவில் இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறிருக்கையில் அவரை அழைத்து வருவதற்கு ஏன் சாராஜஸ்மினுக்கு திறந்த பிடியாணை இன்னும் பிறப்பிக்கவில்லை என்று கேள்வியெழுப்பிள்ளார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவிக்கையில், உயிர்த்தஞாயிறு தொடர்பாக புலனாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சாராஜஸ்மின் இறக்கவில்லை என்ற தகவல் நிரூபணமாகியுள்ளது.
சாராஜஸ்மின் இந்தியாவில் இருப்பதாக எமக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான முன்னைய தகவல்படி நீதிமன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஒரு சூழ்ச்சி இடம்பெற்றிருக்கின்றதா என்பது தொடர்பான விசாரணைகள் புதிய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
புலனாய்வுப்பிரிவின் ஆழமான விசாரணகளுக்கு தடங்கல்கள் ஏற்படும் என்பதால் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் சில தகவல்களை முன்வைக்கவில்லை. தேவைப்படின் சாராஜஸ்மினுக்கு பிடியாணை கோருவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”