டித்வா புயல் தாக்கம்: உயிரிழப்பு 465 ஆக அதிகரிப்பு!
டித்வா புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பதிவாகியுள்ள உயிரிழப்புக்கள் 465 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் 336 நபர்கள் காணாமல் போயுள்ளனர். பல்வேறு மாவட்டங்களிலும் 565 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 20 271 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மேலும் 64 483 குடும்பங்களைச் சேர்ந்த 233 015 நபர்கள் 1441 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. களனி கங்கை, மல்வத்து ஓயா மற்றும் மகாவலி கங்கை என்பவற்றுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் சில பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பெரும்பாலான வான் கதவுகள் மூடப்பட்டாலும், சில நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய அநுராதபுரம் - இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் இரு வான்கதவுகளும், குருணாகலில் தெதுருஓயா நீர்த்தேக்கத்தில் இரு வான் கதவுகளும், கண்டியில் - பொல்கொல்ல, கெனியோன், விக்டோரியா, ரன்தம்பே நீர்த்தேக்கங்களின் 14 வான் கதவுகளும், மொனராகலையில் வெஹரகல நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகளும், மாத்தளையில் போவதென்ன நீர்த்தேக்கத்தில் 6 வான்கதவுகளும், பதுளையில் உல்ஹிட்டிய - ரத்கிந்த நீர்த்தேகத்தில் 6 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனோரை தேடும் பணிகள் இலங்கை, இந்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த மீட்பு குழுக்களால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சில பிரதேசங்களில் மீட்க்கப்படும் சடலங்கள் கொண்டு செல்வதற்கு இடங்கள் இன்றி, குறித்த பகுதிகளிலேயே பிரதேசவாசிகளால் நல்லடக்கமும் செய்யப்படுகின்றன. கொத்மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 9 பேரது சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளன.
கொழும்பில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்திய களனி கங்கையின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும் களனி கங்கையை அண்மித்த இரு மறுங்கிலுமுள்ள தாழ் நிலப்பகுதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளன. எனவே அப்பகுதிகளில் வாழும் மக்களை தற்போது தமது இருப்பிடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
