தொடரும் காலனித்துவம்?
“உலகில் காலனித்துவம் முடிவுக்கு வந்துவிட்டதாகச் சொல்லப்படுகின்றது. இந்த வார்த்தைகளில் நாம் ஏமாந்துவிடக் கூடாது. காலனித்துவம் உண்மையில் முடிவுக்கு வந்துவிடவில்லை.
ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் பொரும்பாலான பகுதி இன்னமும் விடுவிக்கப்படாத நிலையில், இந்தக் கூற்றை நாம் எவ்வாறு ஏற்றுக் கொள்வது? இந்தோனேசியாவிலும், ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் உள்ள எமது சகோதரர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் வழக்கமான வடிவத்தில் அது இப்போது இல்லை. அது இப்போது புதிய வடிவத்தில் உள்ளது, பொருளாதார, அறிவுசார் வடிவத்திலும், உள்நாட்டில் உள்ள ஒரு அந்நிய சிறுபான்மை குழாமின் கட்டுப்பாட்டிலும் அது தொடர்கிறது. திறமை வாய்ந்த, தீர்மானகரமான இந்த எதிரி பல மறைமுக வழிகளில் தன்னை மறைத்துக் கொண்டுள்ளது. தன்னுடைய கொள்ளையை அது இன்னமும் விட்டுவிடவில்லை.
எங்கு, எப்போது, எந்த வடிவத்தில் இருந்தாலும் காலனித்துவம் எனும் கெட்ட விடயம் உலகில் இருந்து துடைத்தளிக்கப்பட வேண்டும்." 1955ஆம் ஆண்டு பான்டுங் மகாநாட்டில் இந்தோனேசிய ஜனாதிபதி சுகர்னோ ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது. காலனித்துவ நாடுகளின் கட்டுப்பாட்டில் அடிமைகளாக இருந்த நாடுகள் சுதந்திரம்(?) பெற்றதாக அறிவிக்கப்பட்டு, உள்நாட்டு அரசியல் தலைவர்கள் தத்தம் நாடுகளின் ஆட்சியாளர்களாக மாறிய பின்னரும் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்காத இன்றைய சூழலிலும் சுகர்னோவின் வார்த்தைகள் பொருந்திப் போவதைப் பார்க்க முடிகின்றது.
ஏழ்மையில் வாடும் மக்களுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையிலான இடைவெளி முன்னெப்போதையும் விடவும் அதிகமாகி உள்ள இன்றைய காலகட்டத்தில் காலனித்துவ நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட சுதந்திரத்தின் பெறுமானம் யாது என்ற கேள்வி மனதைக் குடைகிறது.
நாடுகளின் எல்லைகளைக் கடந்து, உலகின் பெரும் செல்வந்தர்கள், தங்கள் விருப்புக்கு ஏற்ப தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு - அவர்களுக்கு மாத்திரமே - இருப்பதைப் பார்க்க முடிகின்றது. சந்தைப் பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத அம்சமாக இத்தகைய நிலைமை இருந்தாலும், உலகின் கடைக்கோடியில் வாழும் சாதாரண மனிதனும் இத்தகைய நிலையில் பாதிப்புக்கு இலக்காகுவதையும் உணர முடிகின்றது. உலகில் வாழும் பெரும் செல்வந்தர்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டை விடவும் 2024ஆம் ஆண்டில் மூன்று மடங்கு அதிகரித்து உள்ளதாக ஒக்ஸ்பாம் தொண்டு நிறுவனத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இந்தப் போக்கை மேலும் விரைவுபடுத்தி உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவருடைய முரட்டுத்தனமான, செல்வந்தர்களுக்கு ஆதரவான பொருளாதாரக் கொள்கை உலகில் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கம் இடையிலான இடைவெளியை மேலும் விரிவுபடுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தமது கடின உழைப்பு மூலமாகவே பெரும் செல்வந்தர்கள் உருவாகிறார்கள் என்பது பொதுவான நம்பிக்கையாக உள்ளது. ஆனால், உலகின் பெரும்பாலான செல்வந்தர்கள் பணத்தைச் சம்பாதிக்கவில்லை, மாறாக அதனைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்கிறது ஒக்ஸ்பாமின் அறிக்கை.
60 வீதமான பெரும் செல்வந்தர்கள் வாரிசு உரிமை, லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் ஆகிய வழிமுறைகள் ஊடாகவே அபரிமிதமான சொத்துக்களை அடைகிறார்கள். செல்வந்தக் குடும்பங்கள் ட்ரில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை தமது குடும்ப வாரிசுகளுக்கு கைமாற்றுவதன் ஊடாக புதிய கோடீஸ்வர்களை உருவாக்குவது மாத்திரமன்றி, நாடுகளின் அரசியல் மாற்றும் பொருளாதார விடயங்களில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நபர்களாகவும் அவர்களை உருவாக்குகிறார்கள் என்கிறது இந்த அறிக்கை. அடுத்துவரும் ஒருசில பத்தாண்டுகளில் 5 ட்ரில்லியன் டொலர் பெறுமதியான சொத்துகள் இவ்வாறு வாரிசுகளிடம் கையளிக்கப்பட உள்ளது.
அதேவேளை, இதற்கான வரிவிதிப்பு முயற்சிகளில் இருந்து தப்பிக் கொள்வதற்கான வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைக்கிறது. தற்போதைய நிலையில் உலகில் உள்ள பெரும் செல்வந்தர்களின் சொத்துகளில் 85 விழுக்காடு 10 வீதமானவர்களின் கைகளிலேயே உள்ளது. அதேவேளை, சாதாரண மக்களின் வாழ்க்கை பாரிய மாற்றங்கள் எதுவுமின்றி 1990 ஆண்டு நிலைமையிலேயே உள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
உலகம் முழுவதிலும் 3.6 பில்லியன் மக்கள் இவ்வாறு வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களாக உள்ளனர். அதேவேளை, 8.5 விழுக்காடு மக்களின் (700 மில்லியன்) தற்போதைய நாளாந்த வருமானம் வெறும் 2.15 டொலராக மாத்திரமே உள்ளது.
பொருளாதார வளர்ச்சி இன்றைய வேகத்திலேயே தொடர்ந்தும் செல்லுமானால், உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான இடைவெளி இதே அளவில் நீடிக்குமானால், உலகில் இருந்து வறுமையை ஒழிக்க ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம் என்கிறது உலக வங்கியின் அண்மைய ஆய்வறிக்கை. இதனை வேறு வகையில் சொல்வதானால், இந்தப் போரில் உலகம் ஏற்கனவே தோல்வி கண்டுவிட்டது எனலாம். தென் ஆபிரிக்காவில் பிறந்து, தற்போது அமெரிக்காவில் வசிக்கும் ரெஸ்லா உள்ளிட்ட பல நிறுவனங்களின் அதிபரான எலான் மஸ்க், ஒரு ட்ரில்லியன் டொலர் சொத்துக்களைக் கொண்ட உலகின் முதலாவது செல்வந்தராக உயர்ந்துள்ளார்.
உலகின் 170 நாடுகளின் உள்நாட்டு மொத்த உற்பத்தியிலும் அதிகமான செல்வத்தை இவர் தற்போது கொண்டுள்ளார். இந்தப் பட்டியலில் உலகின் செல்வந்த நாடுகள் என சாதாரணமாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பெல்ஜியம், பின்லாந்து, சுவீடன், சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே, ஹொங்கொங், நியூசிலாந்து ஆகியவையும் அடக்கம்.
ஒரு தனி நபரிடம் எவ்வளவு அதிகமான சொத்துகள் உள்ளன என்பதை விவரிக்க இந்த ஒப்பீடு மாத்திரம் போதுமானது. இந்தப் பட்டியலில் மஸ்க் முதலிடத்தில் உள்ள அதேநேரம், மேலும் நால்வர் அடுத்துவரும் பத்தாண்டிற்குள் ட்ரில்லியனர் பட்டியிலில் இடம்பிடிக்க உள்ளார்கள் என்பது கூடுதல் தகவல்.
“ஒரு முனையில் செல்வம் குவியும் போது, பொருள் உற்பத்தியில் ஈடுபடும் மறு முனையில் உள்ள வர்க்கத்தினர் மத்தியில் துயரம், வறுமை, அடிமைத்தனம், உளச் சிதைவு, கொடுமை என்பவை சேர்கின்றன" என்றார் கார்ல் மார்க்ஸ். 150 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தீர்க்க தரிசனத்துடன் முன்வைத்த கருத்து இன்றைய காலகட்டத்திற்கும் மிகவும் பொருந்துவதாக உள்ளதைப் பார்க்க முடிகின்றது.
செல்வந்தர்களுக்கும் வறுமையில் உழல்பவர்களுக்கும் இடையிலான இடைவெளி முன்னெப்போதையும் விடவும் துரிதமாக அதிகரித்துச் செல்வதையும் பார்க்க முடிகின்றது. உழைப்பால் மாத்திரமன்றி வன்முறை, அடக்குமுறை, ஜனநாயக விழுமியங்களைச் சிதைத்தல் ஆகிய வழிமுறைகள் ஊடாக இத்தகைய செல்வக் குவிப்பு நிகழும் போது விளிம்பு நிலையில் உள்ள மக்கள் கையறு நிலையில் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசுகள் செல்வந்தர்களின் செல்வக் குவிப்பை ஊக்குவிக்கும் கொள்கைகளையே பின்பற்றி வருகின்றன. சாமானிய மக்கள் மீதான வரிகளை அதிகரிக்கும் அரசுகள், மறுபுறம் செல்வந்தர்கள் மேலும் செல்வத்தைக் குவிப்பதை ஊக்குவிக்கும் நோக்குடன் அவர்களுக்கு வரிச்சலுகைகளையும் வழங்கி வருகின்றன.
உழைக்கும் வர்க்கம் பல்வேறு வகையிலும் பிளவுண்டு - பிளவு படுத்தப்பட்டு -இருக்கும் இன்றைய உலகளாவிய சூழலில், இந்த முரண்பாடு நீண்ட காலத்துக்கு நீடிக்க முடியாது என்பது தெளிவு. தங்களின் நியாயமான உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய சூழலில் உள்ள உழைக்கும் வர்க்கம் ஒரு கட்டத்துக்கும் மேல் இயல்பாகவே ஆட்சியாளர்களுக்கும், ஆளும் வர்க்கத்துக்கும் எதிராகத் தங்கள் கோபத்தைக் காட்ட முற்படுவார்கள் என்பதுவும் இயங்கியலே.
அத்தகைய ஒரு சூழல் எப்போது உருவாகும், எங்கு உருவாகும், அது எத்தகையதாக அமையக்கூடும் என்பவை போன்ற கேள்விகள் பெறுமதியானவை. அதனை உலகம் தாங்குமா? சூழலுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்வதில் முதலாளித்துவம் இதுவரை சிறப்பாகவே செயற்பட்டு வந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
எனவே, தற்போதைய செல்வக் குவிப்புக்கு ஏதிராக தொழிலாளர் வர்க்கம் கிளர்ந்தெழுமானால், அத்தகைய சூழலைக் கையாளுவதற்கும் முதலாளித்துவத்திடம் ஒன்றுக்கு மேற்பட்ட திட்டங்கள் இருக்கவே செய்யும். ஆனால், சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகளில் முதலாளித்துவம் தோல்விகண்ட வரலாறு உலகில் இருக்கவே செய்கிறது.
எனவே வரலாறு திருப்பி எழுதப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விடாது என்பதே வரலாறாக உள்ளதை மறந்து விடுவதற்கில்லை.
-சுவிசிலிருந்து சண் தவராஜா-
(வீடியோ இங்கே )
அனுசரணை
