ஆவணங்கள் இல்லை என்பதனால் மக்களின் வாழ்வாதார நிலங்களை பறிக்க முடியாது — வேதநாயகன்
மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார நிலங்களுக்கான ஆவணங்கள் இல்லையென்பதைக் காரணங்காட்டி, அக்காணிகளை விடுவிக்க வனவளத் திணைக்களம் மறுப்புத் தெரிவிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மாவட்டச் செயலகத்தால் பரிந்துரைக்கப்படும் காணிகளை வனவளத் திணைக்களம் முழுமையாக விடுவிக்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், குழுவின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் குழுவின் இணைத் தலைவரும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநருமான நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று புதன்கிழமை காலை (25.02.2026) கிளிநொச்சி மாவட்டச் செயலகத் திறன் அபிவிருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் வரவேற்புரையாற்றிய கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் மணல் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள துரித நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
கல்மடுக் குளத்திலிருந்து பெறப்பட்டுச் சுத்திகரிக்கப்பட்ட மணல், தற்போது கரைச்சிப் பிரதேச சபையின் ஊடாக மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
மேலும், கடந்த 'டித்வா' பேரிடரின் பின்னர் இரணைமடுக் குளத்தின் மேலதிக நீர் வெளியேறிய ஆற்றுப் பகுதிகள், அக்கராயன் மற்றும் கல்லாறு ஆகிய ஆற்றுப் பகுதிகளில் குவிந்துள்ள மணலை பிரதேச சபைகள் ஊடாகச் சேகரித்து மக்களுக்கு விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கிளிநொச்சியிலுள்ள 5 குளங்களில் மண்ணைக் கழுவுவதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் சுமார் 15,000 கியூப் மணல் பெற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனூடாக இரு மாவட்டங்களினதும் எதிர்கால மணல் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இதன்போது உரையாற்றிய கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், நடப்பு ஆண்டில் மாவட்டத்தின் அபிவிருத்திக்காகப் பல்வேறு நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறவுள்ள நிலையில், அவற்றை வினைத்திறனுடன் செலவிடுவதற்கான போதிய கால அவகாசம் காணப்படுவதால், அபிவிருத்திப் பணிகளை மிகச் சிறப்பாகவும் துரிதமாகவும் முன்னெடுக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்கான பல்வேறு விடயங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன. பன்முகப்படுத்தப்பட்ட வரவு–செலவுத் திட்ட நிதி, மீள்குடியேற்ற அமைச்சின் ஊடான வீட்டுத் திட்டங்கள், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள், புனரமைக்கப்பட வேண்டிய பாலங்களின் முன்னுரிமைப் பட்டியல், இடர் முகாமைத்துவத் திட்டம் மற்றும் சமூக சக்தி வறுமை ஒழிப்புத் திட்டம் ஆகியவற்றுக்கான அனுமதிகள் கோரப்பட்டபோது, கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் இ.அருச்சுனா, பொ.கஜேந்திரகுமார் மற்றும் பிரதேச சபைகளின் கௌரவ தவிசாளர்கள் ஆகியோர் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
அதேவேளை, வன்னேரிக்குளம் சுற்றுலா அபிவிருத்தி, கௌதாரிமுனையில் காணி வழங்கல் மற்றும் பொருளாதார மத்திய நிலையக் கடைகள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களுக்குக் குழுவினால் அனுமதி வழங்கி வைக்கப்பட்டது.
வனவளத் திணைக்களத்திடமிருந்து 10,821 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், வெறுமனே 1,088 ஏக்கர் காணியை மாத்திரமே விடுவிக்க வனவளத் திணைக்களம் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பில் சுட்டிக்காட்டிய மாவட்டச் செயலாளர், கோரப்பட்ட முழுமையான 10,821 ஏக்கர் காணியையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், அக்கோரிக்கைக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஏகமனதாக அனுமதி வழங்கியது.
வனவளத் திணைக்களத்தால் விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பான முழுமையான விவரங்களை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியைப் பெற்றுச் சமர்ப்பிக்குமாறு அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் இதன்போது குறிப்பிட்டார்.
அதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தின் எதிர்காலக் குடிநீர்த் தேவையைக் கருத்தில்கொண்டு, இரணைமடுக் குளத்திலிருந்து குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதியும் ஒருங்கிணைப்புக் குழுவால் வழங்கப்பட்டது.
அத்துடன், கிளிநொச்சி நகர்ப்புறக் குளங்களின் ஒதுக்கீட்டுக் காணிகளை ஆக்கிரமித்துள்ளவர்களைச் சட்டபூர்வமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
மேலும், கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவை இரண்டாகப் பிரிப்பதற்கும், சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைப் பிரித்து மீளமைப்பதற்கும் ஒருங்கிணைப்புக் குழு அனுமதி வழங்கியது. மேலும், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகளை ஒழுங்குபடுத்துவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அருச்சுனா இராமநாதன் ஆகியோரும், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச சபைகளின் கௌரவ தவிசாளர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்