கலா ஓயா பாலத்தில் நடந்த திகில் – 70 பேரின் உயிரைக் காத்த அதிசய மீட்பு!
கொழும்பு நோக்கி பயணம் செய்த தனியார் பேருந்து, புல்மோட்டை பகுதியிலிருந்து 70 பயணிகளை ஏற்றி வந்தபோது, கலா ஓயா பாலம் அருகே திடீரென உயர்ந்த வெள்ளத்தில் சிக்கியது. பாதையில் மூன்று–நான்கு அடிவரை நீர் இருந்தபோதும், கிராமவாசிகளின் எச்சரிக்கையையும், பயணிகளின் கோஷங்களையும் பொருட்படுத்தாமல் சாரதி பாலத்தை கடக்க முயன்றது பேராபத்துக்குக் காரணமாகியது.
சில நிமிடங்களில் நீர்மட்டம் பயங்கரமாக உயர்ந்து, பஸ் அசையாமல் நடுவே நின்றுவிட்டது. பயணிகள் பயந்து பரிதவித்தனர்.
நீர் மெதுவாக இருக்கைகளையும் கடந்து பஸ்சின் உள்ளே நுழையத் தொடங்கியது. அவசர அழைப்புகளுக்குப் பதிலளித்து படையினரும், கடற்படையினரும் களத்துக்குச் சென்றனர். ஒரே துடுப்புப் படகில் அனைவரையும் மீட்பது முடியாத நிலையில், பஸ்ஸை கயிறுகளால் அருகிலிருந்த கட்டிடத்துடன் கட்டி, 70 பேரையும் ஒன்றன்பின் ஒன்றாக அந்த கட்டிடத்தின் அஸ்பஸ்டஸ் கூரைக்கு ஏற்றினர். சிறிது நேரத்திலேயே அந்த பஸ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது!
ஆனால் இன்னொரு ஆபத்து — அஸ்பஸ்டஸ் Sheet கூரை எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாயம்!
ஹெலிகாப்டர் மூலம் மீட்க முயன்றபோது, கூரை அதிர்ந்து மூவர் கீழே விழுந்தனர். உடனடியாக பொதுமக்களும் கடற்படையும் அவர்களை காப்பாற்றினர். முழு இரவும், மழை, குளிர், பசியால் அவதிப்பட்டு, மக்கள் கூரையில் அசையாமல் உயிர்ப்பிடித்து காத்திருந்தனர்.
இறுதியில் அதிகாலை நேரத்தில் இயந்திரப்படகுகள் கொண்டு வரப்பட்டு, அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்த வெள்ள பேரிடரில் நாடு எதிர்நோக்கும் கொடூர நிமிடங்களில் இதுவும் ஒரு பகுதி மட்டுமே.
(வீடியோ இங்கே )
அனுசரணை
