அனுர அரசு மக்களை படுகொலை செய்துள்ளது: பாராளுமன்றில் குற்றஞ்சாட்டி விட்டு நழுவிய சாணக்கியன்
நாட்டில் நீலவிய சீரற்ற காலநிலையினால் இதுவரை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்களை வெளியிட அரசாங்கம் தயக்கம் காட்டுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
அனைத்து எதிர்கட்சியினரும் எடுத்துள்ள தீர்மானத்தின் அடிப்படையில் தமிழரசுக் கட்சியினரும் சபையில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
“வடக்கு, கிழக்கு மாத்திரமல்ல நாடு பூராகவும் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை விபரம் நேற்று மாலை 6 மணிக்கு பிறகு தரப்படவில்லை. அரசாங்கம் தகவல்களை வெளியிட தயக்கம் காட்டுகின்றது.
இவ்வாறானதொரு நிலையில் எதிர்கட்சியை சேர்ந்த நாம் அனைவரும் ஓரணியாக நின்று இன்றைய நாளில் நாடாளுமன்றத்தில் இருந்து எங்களுடைய மாவட்டங்களிலுள்ள மக்களின் குறைபாடுகளை மற்றும் நிவாரணப்பணிகளை எவ்வாறு செய்யலாம் என்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
காரணம் நாங்கள் மாத்திரமல்ல பெரும் சிரமத்துக்கு மத்தியில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வந்துள்ளோம். மக்கள் நலன் தொடர்பில் பல விடயங்களை சிந்தித்து செயற்படுத்த வேண்டியுள்ளது, அதற்காக சில மணிநேரம் கேட்டும் சபாநாயகராகிய நீங்கள் அதற்கான வாய்ப்பை தரவில்லை.
இந்த அனர்த்தம் முன்னாயத்தம் இல்லாத படுகொலையாகவே கருதப்படுகின்றது. ஆகவே, மக்களின் பிரச்சினைகளை முன்வைக்க முடியாத இந்த உயரிய சபையில் இருந்து வெளியேறுகின்றோம்“ என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று காலை 10 மணியளவில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 355 பேர் உயிரிழந்ததுடன் 366 பேர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு பிறகு உயிரிழந்தவர்களின் விபரம் அரசினால் அறிவிக்கப்படவில்லைஎன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சாணக்கியம் எம்பி கோமாவில் இருந்துகொண்டு கதைக்கின்றாரா என விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
இந்த இக்கட்டான சூழலில் ஜனாதிபதிக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிக்களும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவி செய்யலாம் இந்த நாட்டினை எவ்வாறு மீள கட்டியெழுப்பலாம் என ஆலோசனை வழங்குவதை விட்டு விட்டு ஆபத்து வரும் சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரும் விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்து விட்டு வெளிநடப்பு செய்வது பொருத்தமற்றது என விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
இக்கட்டான சூழலில் வெளிநடப்பு செய்யும் இவர்களினால் எவ்வாறு தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்று தர முடியும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
