3,000 கோடி நிதி ஒதுக்கீடு இதுவும் கடந்து போகும் - ஜனாதிபதியின் விசேட உரை (வீடியோ இணைப்பு)
தற்போதுள்ள அனர்த்த நிலையை நிர்வகித்து, வேகமான, வினைத்திறனான மீள்நிர்மாணத்திற்குத் தேவையான சட்டப் பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளின் தேவைகளுக்காகவே அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்த அவசரகாலச் சட்டம் அனர்த்த முகாமைத்துவத்திற்கும், வினைத்திறனாக நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், வேறெந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கும் இது பயன்படுத்தப்படாது என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே ஜனாதிபதி இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் உண்டான சேதங்கள் மற்றும் அவசரகால அனர்த்த நிலைமைகளை நிர்வகித்தல், மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருதல் அல்லது முன்பு இருந்ததை விட மேம்பட்ட நிலைக்குக் கொண்டுவருதல் ஆகிய மூன்று கட்டச் செயன்முறைக்கும் அரசாங்கமே பொறுப்பு என்று கூறினார்.
"இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போதும், அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும்போதும் ஏற்படும் இழப்புகள் மற்றும் அவசரகால அனர்த்தங்களை நிர்வகித்தல், மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருதல் அல்லது முன்பு இருந்ததை விட மேம்பட்ட நிலைக்குக் கொண்டுவருதல் ஆகிய மூன்று கட்டச் செயன்முறைக்கும் அரசாங்கமே பொறுப்பாகும்.
அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை, நிலைமை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம்." என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம் என்பதையும் அறிவோம். முழு நாடும் பேரழிவிற்கு உட்படுத்தப்பட்ட முதல் அனுபவம் இது.