நிராகரிக்கப்பட்டதை மீள விலியுறுத்தி தமிழரசுக்கட்சி தமிழர்களுக்குச் மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது!
தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பு வரைவை முன்கொண்டு செல்வதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அளித்த வாக்குறுதியை மேற்கோள்காட்டி, அவரிடம் அவ்விடயத்தை தமிழரசுக்கட்சி மீளவலியுறுத்தியிருப்பது தமிழர்களுக்குச் செய்திருக்கும் மிகப்பெரிய துரோகமாகும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் வெள்ளிக்கிழமை (21) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துரைக்கையிலேயே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
வட, கிழக்கு மாகாணங்களில் எவ்வித குழப்பங்களும் ஏற்படுத்தப்படக்கூடாது என்ற நோக்கில் வட, கிழக்கில் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் உள்ள சகல கட்சிகளும் குறைந்தபட்சம் தமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் என்றாலும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்ற நோக்கில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் மற்றும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தோம்.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் இதுகுறித்து மூன்று கட்சிகளும் இணைந்து பேசுவதற்கான சகல ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அம்முயற்சிகள் தமிழரசுக்கட்சியால் ஒருதலைப்பட்சமாக முறிக்கப்பட்டன.
குறிப்பாக தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளராக சுமந்திரன் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்தே அப்பேச்சுவார்த்தைகள் முறிக்கப்பட்டன.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வை முன்னிறுத்திய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்காத நிலையில், அதுபற்றி கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு ஒன்றை எட்டவேண்டிய அவசியம் இப்போது இல்லை என்பதே அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.
அதேபோன்று உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களின்போது எமக்கும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்கும் இடையில் கொள்கை ரீதியில் இணக்கப்பாடு எட்டப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அவ்வேளையில் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் மற்றும் செயலாளருடன் கலந்துரையாடியபோதும் கொள்கை ரீதியிலான இணக்கப்பாடு எட்டப்படவேண்டும் என்ற விடயத்தையே நாம் வலியுறுத்தினோம்.
இவ்வாறானதொரு பின்னணியில் காணி அபகரிப்பு, அரசியல் கைதிகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள், தமிழர் பிரதேசங்களில் பௌத்த சின்னங்கள் நிறுவப்படல் உள்ளடங்கலாக சகல தமிழர் பிரச்சினைகளிலும் முன்னைய அரசாங்கங்களின் அணுகுமுறையே தற்போதைய அரசாங்கத்தினாலும் பின்பற்றப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஜனாதிபதியை சந்தித்திருக்கும் தமிழரசுக்கட்சி தமிழர் இனப்பிரச்சினை விவகாரத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு இடையில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டுவதற்கான எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
அதுமாத்திரமன்றி அச்சந்திப்பின்போது ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டதாக அக்கட்சியின் செயலாளரால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட விடயங்கள் மிகமிக ஆபத்தானவையாகும். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இப்போது தமிழரசுக்கட்சியின் வாக்கு வங்கி கணிசமானளவு வீழ்ச்சியடைந்திருக்கின்றது.
அதற்குப் பிரதான காரணம் 2015 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் சம்பந்தனும், சுமந்திரனும் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து தயாரித்த 'ஏக்கிய இராச்சிய' புதிய அரசியலமைப்பு வரவேயாகும்.
அவ்வாறிருக்கையில் அந்த ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பு வரைவை முன்கொண்டு செல்வதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அளித்த வாக்குறுதியை மேற்கோள்காட்டி, தமிழரசுக்கட்சி அவ்விடயத்தை வலியுறுத்தியிருப்பது தமிழர்களுக்கு இழைத்திருக்கும் மிகப்பெரிய துரோகமாகும் என்றார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
