அரசாங்கத்திற்கு எதிராக நடைபெறும் பேரணி: பெருந்திரளான மக்கள் நுகேகொடைக்கு படையெடுப்பு
கூட்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் பேரணி சற்று முன்னர் நுகேகொடையில் ஆரம்பமான நிலையில் பெருந்திரளான மக்கள் அங்கு கூடியுள்ளனர்.
நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் குறித்த பேரணி ஆரம்பமாகியுள்ளது. களத்தில் அதிகளவான மக்கள் கூடியுள்ளனர். மற்றும் பெருமளவான அரசியல்வாதிகளும் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.
பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட மேலும் பல எதிர்கட்சிகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தனர். டிரான் அலஸ், உதய கம்மன்பில, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, லசந்த அழகியவன்ன, வஜிர அபேவர்தன, சாகல ரத்நாயக்க, விஜயதாச ராஜபக்ஷ, ராஜித சேனாரத்ன, பிரசன்ன ரணதுங்க மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பலர் உட்பட முக்கிய அரசியல்வாதிகள் பலர் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தநிலையில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுஜன பெரமுனவின் தலைவருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர் பேரணிக் களத்திற்கு வருகை தந்துள்ளார். இதில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இருப்பினும் சமகி ஜன பலவேகய, சர்வஜன பலய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன. பேரணிக்காக பொதுமக்கள் அதிக அளவில் கூடத் தொடங்கியுள்ளதுடன், மேலும் நுகேகொடை நகரத்தில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், கட்சித் தலைவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பேரணியில் கலந்துகொள்ளும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிறப்பு போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டு மக்கள் ஆவலுடன் காத்திருந்த குறித்த பேரணியில் தற்போது மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் பேரணி தொடங்கிய உடனேயே மின்சாரம் முற்றாக துண்டிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் நிகழ்ச்சி ஆரம்பமே இடையூறுக்கு உள்ளானதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
மின்சாரத் தடை ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
