அவுஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்ததற்காக இருவர் கைது!
மன்னாரில், மோசடி, சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் அவுஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்ததற்காக மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை முருங்கன் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் அவர்களை முன்னிலைப்படுத்தினர்.
குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மன்னார், நானாட்டான், புதுக்குடியிருப்பு, ஓமந்தை மற்றும் ஆலம்பில் பகுதிகளில் பல வணிகங்களை தொடங்க அவுஸ்திரேலிய முதலீட்டாளர் நிதி வழங்கியுள்ளார்.
இந்த முயற்சிகளில் நான்கு வன்பொருள் கடைகள், இரண்டு பெரிய தென்னந்தோட்டம், ஒரு பால் பண்ணை, ஒரு நெல் வயல் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடங்கும்.
இதன்போது, சுமார் 180 மில்லியன் பெறுமதியான மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சி.ஐ.டி.யினர் நேற்று குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்தனர்.
எனினும், முக்கிய சந்தேகநபரும் அவரது மனைவியும் தற்போது தலைமறைவாக உள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
