கைதிகளை விசேட சிறையில் தடுத்துவைக்குமாறு உத்தரவிடுவதைத் தவிர்க கோரிக்கை!
எந்தவொரு சந்தேகநபர்களை அல்லது கைதிகளை விசேட சிறையில் தடுத்துவைக்குமாறு நீதிவான்கள் உத்தரவிடுவதைத் தவிர்க்குமாறு நீதிச்சேவை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸின் கையெழுத்துடன் நீதித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிபதிகளின் உத்தரவின் பேரில் சந்தேகநபர்கள் அல்லது கைதிகள் பிரத்தியேக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், எந்தவொரு சந்தேகநபர் அல்லது கைதிக்கு விசேட பாதுகாப்பு வழங்க நீதிபதிகள் உத்தரவிடக்கூடாது எனவும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, திறந்த நீதிமன்றத்தில் பெறப்படும் கோரிக்கைகள் மாத்திரம் சம்பந்தப்பட்ட சிறைச்சாலை கண்காணிப்பாளரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டால் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் அல்லது கைதிகளை அவர்களின் குடும்பத்தினரின் சிறப்பு சந்தர்ப்பங்களுக்காக அல்லது பிற நோக்கங்களுக்காக சிறையில் அடைக்கும் காலத்தில் அவர்களின் வீடுகளுக்கும் பிற இடங்களுக்கும் அழைத்துச் செல்ல நீதிபதிகள் உத்தரவிடக்கூடாது.
எந்தவொரு காரணத்திற்காகவும் சிறையிலிருந்து எவரேனும் வெளியே அழைத்துச் செல்லப்பட்டால், சிறைச்சாலை கண்காணிப்பாளர் அந்த விடயத்தையும் அதற்கான காரணங்களையும் நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகநபர்கள் அல்லது கைதிகள் மருத்துவ சிகிச்சை தொடர்பாக முன்வைக்கும் கோரிக்கைகளை நீதிவான் மற்றும் சிறை மருத்துவர்களுக்கும் அனுப்ப வேண்டும் என்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
