அர்ச்சுனாவிடம் மக்கள் முன்வைக்கும் சில கேள்விகள் - பதில் சொல்வாரா?
பண வசூலிப்புக்கு ஐரோப்பா சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் அர்ச்சுனாவிடம் மக்கள் சந்திப்பின் போது கேட்கப்பட வேண்டிய கேள்விகள்.
கட்சிக்கு ஒரு நிர்வாக குழு தேர்வு செய்யப்படும் என்றும் அந்தக் குழுவில் இலங்கையில் இருந்து சிலரும் வெளிநாட்டிலிருந்து சிலரும் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் அவர்களே வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணத்தை நிர்வகிப்பார்கள் என்றும் பணம் வசூலிப்பு வெளிப்படை தன்மையுடன் நடைபெறும் என்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு முதல் கூறியிருந்தீர்கள். ஆனால் ஒரு வருடமாகியும் அப்படி ஒரு குழு ஏற்படுத்தப்படாமலேயே பண வசூலிப்பு நடைபெறுகிறது.
இந்த நிலையில் மீண்டும் மாகாண சபை தேர்தலுக்கு பணம் வேண்டும் என்றும் அதேபோல ஒரு குழு உருவாக்கப்படும் என்றும் கூறுகிறீர்கள். உங்கள் கட்சிக்கு வரும் பணம் தொடர்பான தகவல் உங்களையும் கௌசல்யாவையும் தவிர கட்சியில் வேறு யாருக்கு தெரியும்? உங்கள் கட்சியின் பொருளாளர் யார் ? ஏனெனில் உங்கள் கட்சியில் தற்போது நாலு பேர் மாத்திரமே உள்ளனர். ( அர்ச்சுனா , கௌசல்யா முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் ஜெகதாஸ் , பிரகாஷ் )
நீங்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் ஊழல் நடக்கிறது என்று கூறி அதை பிரதான பேசு பொருளாக வைத்து தான் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டீர்கள். தேர்தலிலும் வெற்றி பெற்றிருந்தீர்கள். தேர்தலுக்கு பின் இதுவரை எத்தனை தடவை சாவகச்சேரியில் மக்கள் சந்திப்பை நடத்தியிருக்கிறீர்கள் ?

வைத்தியர்கள் ஊழல் செய்கிறார்கள் என்பதே உங்களது பிரதான குற்றச்சாட்டு. அவர்கள் மீது பாலியல் மற்றும் பண மோசடி போன்ற பாரதூரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தீர்கள். ஆனால் பின்னர் இணக்கசபைக்கு போய் ஏன் அவர்களிடம் “மறப்போமா மன்னிப்போமா” என்று இணக்கம் பேசினீர்கள் ? ஆக நீங்கள் கூறியவை ஆதாரமற்ற போலி குற்றச்சாட்டுகளா ? பாலியல் குற்றத்தில் மறக்க மன்னிக்க என்ன இருக்கிறது? ஒரு பாராளுமன்ற உறுப்பினராக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு ஒரு தடவையாவது சென்று பார்வையிட்டிருக்கிறீர்களா ?
அடுத்ததாக உங்களுடன் ஒரு மாதமே அரசியலில் ஈடுபட்ட மயூரனுக்கு 80 லட்சம் பணம் புலம் பெயர் தமிழர்களிடமிருந்து அனுப்பப்பட்டது என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் ஒரு வருடத்திற்கு மேலாக பணம் வசூலிப்பில் ஈடுபட்டிருக்கும் உங்களிடம் வெறும் 60 லட்சம் மட்டுமே உள்ளது என உங்கள் அடையாள அட்டை இலக்கத்தையும் கூறுகிறீர்கள். இது நம்ம கூடிய கதையா ?
இந்த வருடத்துக்குரிய Transaction History ஐ உங்களால் பகிரங்கப்படுத்த முடியுமா ? உங்கள் சிங்கள மனைவி மற்றும் கௌசல்யாவின் அடையாள அட்டை இலக்கங்களையும் பொது வழியில் பகிர முடியுமா ? ஏனெனில் வசூலித்த பணம் அனைத்தையும் ஒரே வங்கி கணக்கில் வைத்திருக்கக் கூடாது என்பது முதலாம் வகுப்பு பையனுக்கு தெரியும்.
அடுத்ததாக புலம்பெயர் தமிழர் ஒருவரது முறைப்பாட்டின் அடிப்படையில் உங்கள் சம்பத் வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருந்ததாக கூறியிருந்தீர்கள். அந்த வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருந்தது? வெறுமனே BOC இல் மட்டும் 60 லட்சம் இருக்கின்றது என்றும் நீங்கள் வெளிப்படையானவர் என்றும் எல்லா நேர்காணலிலும் கூறிக் கொண்டிருக்கிறீர்கள்.

சாவகச்சேரி போராட்டம் ஆரம்பித்த போது நீங்கள் பல wise கணக்கு இலக்கங்களை வெளிநாட்டில் பணம் வசூலிப்பதற்காக கொடுத்திருந்தீர்கள். அந்த கணக்குகளில் தற்போது எவ்வளவு பணம் உள்ளது?
உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்த பணம் வேண்டும் என்று நீங்கள் பணம் வசூலித்து விட்டு பின்னர் தேர்தல் விண்ணப்ப படிவங்களே சமர்ப்பிக்காமல் விட்டதாக உங்களுடன் சேர்ந்து உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டவர்களே உங்கள் மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். உண்மையில் எவ்வளவு பணம் உங்களிடம் சேர்ந்தது ? இந்த தகவல் உங்கள் கட்சியில் உங்களை தவிர வேறு யாருக்காவது தெரியுமா ?
அடுத்ததாக நீங்கள் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று முன்னாள் போராளிகளுக்கும் உதவுவீர்கள் என்று கூறியிருந்தீர்கள். நீங்கள் கூறியபடியே பணத்தை பெற்றுக் கொண்டீர்கள். ஆனால் இதுவரை நீங்கள் ஒரு போராளிக்காவது உதவி செய்தமைக்கான ஆதாரம் உண்டா ? குறைந்தபட்சம் உங்கள் கட்சியில் இருந்த முன்னாள் போராளி சதீஷுக்காவது உதவி செய்திருக்கிறீர்களா ?
நீங்கள் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் முறிகண்டி மற்றும் A9 வீதியில் பிச்சை எடுப்பவர்களை உங்கள் காரில் ஏற்றிக்கொண்டு போய் உதவி செய்வேன் என்று கூறியிருந்தீர்கள். இதுவரை ஒருவருக்காவது உதவி செய்திருக்கிறீர்களா ? அதற்குரிய ஆதாரம் ஏதாவது உண்டா?

போராட்டம் தவறானது என்று எந்த அடிப்படையில் பாராளுமன்றத்தில் பேசினீர்கள்? போராட்டம் தவறானது என்றால் ஏன் “மேதகுதான் தலைவர் “ “நாங்கள் தனி நாடு நடத்தியவர்கள்” என்றும் மற்றும் “மாவீரர்கள் பற்றியும் அடிக்கடி பாராளுமன்றத்தில் பேசுகிறீர்கள்? யாரிடம் கைதட்டு வாங்குவதற்கு? அல்லது யாரிடம் பணம் வசூலிப்பதற்கு?
அடுத்ததாக உங்கள் தந்தை ராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டார் என்று ஐநாவில் முறையிட்டதாக கூறியிருந்தீர்கள். அந்த ராணுவத்துக்கு தலைமை தாங்கியது மஹிந்த ராஜபக்ஷ என்பது உங்களுக்கு தெரியுமா?
பின்னர் எந்த அடிப்படையில் மஹிந்த ராஜபக்ச தான் சிறந்த தலைவர் என்று கூறினீர்கள்? மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ஷ உங்களுக்கு “ மச்சான் “என்றும் அவர் நல்ல மனிதர் என்றும் எந்த அடிப்படையில் கூறினீர்கள்? ( நாமல் எவளவு நல்லவர் என்று யூரியூப் வீடியோ வேறு வெளியிட்டிருக்கிறீர்கள் ) நாமல் ராஜபக்ஷ தமிழர்கள் தொடர்பாக ஏதாவது நல்ல விடையங்களை இதுவரை பேசி இருக்கிறாரா?
உங்களை ஏன் நாமல் ராஜபக்சவின் சட்டத்தரணி பிணை எடுப்பதற்காக வந்தார் ? உங்களிடமே ஒரு சட்டத்தரணி இருப்பதாகவும் அவர் மிகவும் திறமை வாய்ந்தவர் என்றும் நீங்கள் தானே முகநூலில் அடிக்கடி கூறிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த சட்டத்தரணியால் வாதாட முடியாதா ?
உங்களுக்கு சுவிஸ் வீசா எடுத்து தந்தவர் ஒரு முஸ்லிம் அண்ணா என்று கூறுகிறீர்கள். யார் அந்த முஸ்லிம் அண்ணா ?
(வீடியோ இங்கே )