ஐ.நா. மேற்கத்திய மற்றும் இந்திய வல்லரசுகளின் கருவியாக செயற்படுகின்றது! கஜேந்திரகுமார்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் விவகாரத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போட்டு, மேற்கத்திய மற்றும் இந்திய வல்லரசுகளின் கருவியாக மட்டுமே பயன்படுத்தப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விமர்சித்தார்.
அவர், இந்த அரங்கை "தேவையற்றது" எனக் கூறி, கட்சி அரசியலைத் தாண்டி, தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் நீதி கோருபவர்களுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை, யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய காஜேந்திரகுமார் பொன்னம்பலம், பின்வருமாறு கூறினார்:
"ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் விவகாரம் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ளது. இது மேற்கத்திய மற்றும் இந்திய வல்லரசுகளின் அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
2012இல், மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, 'அவரது ஆட்சி முடிந்தவுடன் பொறுப்புக்கூறலைப் பார்ப்போம்' எனக் கூறப்பட்டது. 2015இல் நல்லாட்சி அரசு பொறுப்பேற்றபோது, 'இது நல்ல ஆட்சி, இதில் பலவற்றைச் சாதிக்கலாம்' எனக் கூறி, இலங்கை அரசுக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது. நாங்கள் இவ்வாறான உண்மைகளை அம்பலப்படுத்துவதால், சிலர் எங்களைக் குறைகூறுகின்றனர்.
ஆனால், அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. 2009 மே 17இல், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், இறுதி யுத்த நிலைமை குறித்து மூன்று தூதரகங்களுக்கு (இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா) தகவல் தெரிவிக்குமாறு என்னிடம் கூறினார். அதன்படி, நானே அந்தத் தகவல்களை அளித்தேன். இதனை விக்கிலீக்ஸ் மூலம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
இலங்கையில் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு, சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பு.
ஆனால், சில தரப்புகள் இவ்விவகாரத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தொடர்ந்து தக்கவைக்க முயல்கின்றன. சர்வதேச அரசியலைப் பயின்றவன் என்ற முறையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை, தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் விவகாரத்தை மலினப்படுத்தும் ஒரு தேவையற்ற அரங்கம் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.
இவ்விவகாரத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல நாங்கள் முயற்சிக்கும் வேளையில், சிலர் அதனைக் கொச்சைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.எனவே, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் நீதி பெறுவதற்கு, கட்சி அரசியலைத் தாண்டி செயல்பட விரும்புவோருடன் இணைந்து நாங்கள் பயணிக்கத் தயாராக உள்ளோம்."
(வீடியோ இங்கே )
அனுசரணை



