மத்திய மாகாண அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு: விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் மற்றும் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து மாகாண மட்டத்தில் உள்ள அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் தொடரின், முதலாவது மாகாண மட்ட நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை (26) கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களை தெளிவுபடுத்துவதையும், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து அதிகாரிகளின் அறிவை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சி, மத்திய மாகாண சபை, மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் அனைத்து நிறைவேற்று அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.

கொழும்பை மையமாகக் கொண்டு டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் AI தொழில்நுட்பம் குறித்து அரச அதிகாரிகளுக்கான ஆறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளதுடன், இதில் 4,000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் மாகாண மட்டத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தி, அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் தொடர்பாக அரச அதிகாரிகளின் வகிபாகம் மற்றும் AI தொழில்நுட்பத்தை அரச நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவது குறித்து கொழும்புக்கு வெளியே உள்ள அனைத்து அரச அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி அலுவலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய மற்றும் தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான ஹர்ஷ புரசிங்க மற்றும் சமீஷ அபேசிங்க ஆகியோர் வளவாளர்களாக இதில் கலந்துகொண்டார்கள்.
ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகேயும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
