சர்வதேச சுயாதீன விசாரணை ஊடாகவே பொறுப்புக்கூறலை அடைந்துகொள்ளமுடியும்!

#SriLanka #Lanka4 #Human Rights
Mayoorikka
1 hour ago
சர்வதேச சுயாதீன விசாரணை ஊடாகவே பொறுப்புக்கூறலை அடைந்துகொள்ளமுடியும்!

இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் உள்ளகப்பொறிமுறை ஊடாகவன்றி, சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடைந்துகொள்ளமுடியும் என சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 தேசிய கனேடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் 'இலங்கையில் சர்வதேச பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல்' எனும் தலைப்பிலான கலந்துரையாடலொன்று கடந்த வாரம் ஜெனிவா ஊடக அமையத்தில் நடைபெற்றது. 

தேசிய கனேடியத் தமிழர் பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ருக்ஷா சிவானந்தனால் தொகுத்தளிக்கப்பட்ட இக்கலந்துரையாடலில் சர்வதேச குற்றவியல் வழக்கறிஞரான அலைன் வேனர், சர்வதேச சட்டத்தரணி மரியம் பொஸ்டி, பாலியல் மற்றும் பாலின வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையாளர் ஜுலி டுபே கக்னன், தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஸ்ரீ ஞானேஸ்வரன் (நிகழ்நிலை முறைமையில்) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

 அவர்கள் உள்ளகப்பொறிமுறைகள் மூலமாகவன்றி, சுயாதீன சர்வதேச விசாரணைகளின் ஊடாக மாத்திரமே இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யமுடியும் என்ற விடயத்தைப் பொதுவாக வலியுறுத்தினர்.

 அதன்படி இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து சுட்டிக்காட்டிய ருக்ஷா சிவானந்தன், உள்நாட்டில் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு சர்வதேச பொறுப்புக்கூறல் செயன்முறையொன்று உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டார். 

அத்தோடு பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் தப்பிப்பிழைத்தோரின் நம்பிக்கையை வென்றெடுத்ததும், குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறவைக்கக்கூடியதும், தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கக்கூடியதுமான சர்வதேச சுயாதீன விசாரணை மற்றும் வழக்குத்தொடரல் பொறிமுறையை விரைவாக ஸ்தாபிக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் பிரஸ்தாபித்தார்.

 அதேவேளை நிகழ்நிலை முறைமையில் உரையாற்றிய வடமாகாணத்தைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் தமிழ் சிவில் சமூக அமையத்தின் செயற்பாட்டாளர் ஸ்ரீ ஞானேஸ்வரன், 1948 ஆம் ஆண்டு முதல் தமிழ்மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இனவழிப்பு யுத்தம், இனவழிப்பு கலவரம், இனப்படுகொலை, அரச அனுசரணையுடனான கண்காணிப்பு, ஒடுக்குமுறை, அத்துமீறல், கைது, வன்முறை, சித்திரவதை, பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல், சிங்களமயமாக்கல், வலிந்து காணாமலாக்கப்படல்கள், காணி சுவீகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் பற்றி விளக்கமளித்ததுடன் அவை இப்போதும் தொடர்வதாக விசனம் வெளியிட்டார். 

அதுமாத்திரமன்றி அண்மையில் கண்டறியப்பட்ட செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியானது நம்பகத்தன்மை வாய்ந்ததும், சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணைப்பொறிமுறையொன்று உடனடியாக நிறுவப்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 அதேபோன்று இதுகுறித்து கருத்துரைத்த சர்வதேச குற்றவியல் வழக்கறிஞர் அலைன் வேனர், தமிழ்மக்களின் மீண்டெழும் தன்மையைப் பாராட்டியதுடன் நீதிக்கான தொடர் போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். 

அத்தோடு இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஆதாரங்களைத் திரட்டுவதற்கான ஐ.நாவின் முயற்சியை அங்கீகரித்த அவர், இருப்பினும் சர்வதேச சுயாதீன விசாரணையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடையமுடியும் என்றார். மேலும் ஆதாரங்கள் முறையாக ஆவணப்படுத்தப்பட்ட முழுமையான வழக்கு கோப்புகளை தயாரிக்கவேண்டிய முக்கிய வகிபாகத்தை தமிழ்ச்சமூகம் கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அலைன் வேனர், பல்வேறு தேசிய நீதிமன்றங்கள் மற்றும் சட்ட ஏற்பாடுகள் ஊடாக தமிழர்களின் நீதியைக்கோரும் செயன்முறை தொடரவேண்டும் என வலியுறுத்தினார்.

 அடுத்ததாக, 'பொறுப்புக்கூறல் சார்ந்த முயற்சிகளை சீராக வடிவமைப்பதில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும், தப்பிப்பிழைத்தோருக்கும் முக்கிய பங்குண்டு. குறிப்பாக சான்றுகளை ஆவணப்படுத்துவதிலும், நீதியை முன்னிறுத்திய பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதிலும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் தனிப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் முன்னரங்கில் நின்று பணியாற்றுகின்றனர்' என சர்வதேச சட்டத்தரணி மரியம் பொஸ்டி தெரிவித்தார்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!