வடக்கு கிழக்கில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மழை: பிரதீபராஜா விடுத்துள்ள அறிவுறுத்தல்

இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
வானிலை தொடர்பில் அவர் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் குறிப்பிடுகையில் இந்த மழை மேற்காவுகைச் செயற்பாட்டினால் கிடைக்கும் மழை என்பதனால் முற்பகலை விட பிற்பகலில் அல்லது இரவில் அதிக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அத்தோடு இடிமின்னலுடன் கூடியதாகவே இம்மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதே வேளை இன்றும் நாளையும், நாளை மறுநாளும், முகில்களற்ற/ மழையற்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரதேசங்களில் காலை 11.00 முதல் பிற்பகல் 3.00 மணி அதிகளவிலான உணரக்கூடிய வெப்பநிலை நிலவும். எனவே அதிக வெப்பநிலையினால் பாதிக்கப்படக்கூடியவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருப்பது சிறந்தது. என தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் சுமார் 50 மி.மீ. வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



