மோசடித் திருமணங்களுக்கு முடிவு கட்டும் பிரான்ஸ்:

பிரான்சில், குடியுரிமை மற்றும் பிற சலுகைகளைப் பெறுவதற்காகச் செய்யப்படும் போலித் திருமணங்களைத் ("Mariages blancs") தடுப்பதற்கு அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது "அரசாங்கத்தின் முன்னுரிமை" என்று அறிவித்துள்ள உள்துறை அமைச்சர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இது தொடர்பாக ஒரு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்தப் புதிய உத்தரவின்படி, திருமணங்களை நடத்தும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர முதல்வர்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இனி, திருமணத்திற்கு விண்ணப்பிக்கும் தம்பதியினரின் உண்மையான நோக்கம் தீவிரமாக ஆராயப்படும். விண்ணப்பிக்கும் தம்பதியினரிடம் கூட்டாக விசாரணை நடத்தப்படும். அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டால், இருவரிடமும் தனித்தனியாகவும் விசாரணை நடத்தப்படும். தம்பதியினரின் நோக்கத்தில் சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது அது ஒரு போலியான திருமணமாக இருக்கலாம் என்று வலுவான அறிகுறிகள் தென்பட்டாலோ, திருமணத்தை உடனடியாக நிறுத்தி வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகம் உறுதியானால், உடனடியாக மாவட்ட அரசு வழக்கறிஞருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். வதிவிட அனுமதியில்லாதவர்கள் மீது சிறப்பு கவனம்: குறிப்பாக, வதிவிட அனுமதியில்லாமால் நாட்டில் தங்கியிருப்பவர்களின் திருமண விண்ணப்பங்கள்மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரான்சில் போலித் திருமணங்களின் எண்ணிக்கை கடந்த தசாப்தத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. 2017-ல் 272 ஆக இருந்த மோசடித் திருமணங்களின் எண்ணிக்ககை 2019-ல் 553 ஆக உச்சத்தை எட்டியது.2022-ல் இது 406 ஆகப் பதிவாகியுள்ளது . பிரான்சில் ஆண்டுதோறும் சுமார் 2,47,000 திருமணங்கள் நடைபெறுகின்றன.வதிவிட அனுமதி பெறுவதற்காக போலித் திருமணம் செய்வது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். 5 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை. 15,000 யூரோ வரை அபராதம் விதிக்கப்படலாம் .
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



