பிரான்ஸை உலுக்கும் கனமழை, புயல்: கடும் எச்சரிக்கை!

வெப்ப அலைக்கு முற்றுப்புள்ளி, வானிலையில் திடீர் திருப்பம். பாரிஸ், ஆகஸ்ட் 19, 2025: பிரான்ஸை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வாட்டி வதைத்த கடும் வெப்ப அலை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து, நாட்டின் பெரும் பகுதிகளில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும் என Météo France (பிரான்ஸ் வானிலை ஆய்வு மையம்) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நாடு முழுவதும் 68 மாவட்டங்களுக்கு 'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. இல்-து-பிரான்ஸ் (Île-de-France) பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் இந்த மஞ்சள் எச்சரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இன்று(19) செவ்வாய்க்கிழமை காலை முதலே வானிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் தெற்கு மற்றும் பிரிட்டான் பகுதிகளில் தொடங்கியுள்ள இந்த மழை, நாள் முழுவதும் மற்ற பகுதிகளுக்கும் பரவும்.சில பகுதிகளில் மிகக் குறுகிய நேரத்தில் அதிக அளவு மழை பெய்து, திடீர் வெள்ளப்பெருக்குக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது. புயல் சின்னம் கடக்கும்போது பலத்த சூறைக்காற்று வீசும், அத்துடன் ஆலங்கட்டி மழையும் பெய்யக்கூடும். இந்தப் புயல் காரணமாக வெப்பநிலை திடீரெனவும், கடுமையாகவும் குறையும். கடந்த சில நாட்களாக இயல்பைவிட 10°C வரை அதிகமாக இருந்த வெப்பநிலை, இனி வரும் நாட்களில் இயல்பைவிடக் குறைவாகவே இருக்கும். இந்த வானிலை மாற்றம் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சீரற்ற வானிலை இன்றும் நாளையும் (புதன், ஆகஸ்ட் 20) நீடிக்கும். குறிப்பாக, புதன்கிழமை அன்று நாட்டின் கிழக்குப் பகுதி மற்றும் பாஸ்க் (Basque) பிராந்தியத்தில் மழைப்பொழிவு இன்னும் கூடுதலாக இருக்கக்கூடும் என்று Météo France கணித்துள்ளது.
ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கி பல வெப்பநிலை சாதனைகளை முறியடித்த வெப்ப அலை முடிவுக்கு வருவதால் மக்கள் நிம்மதி அடைந்தாலும், அடுத்த சில நாட்களுக்குப் புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றும் ,தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



