பெட்ரோல் நிலையம் திறப்பது எப்படி? லாபமா? நஷ்டமா? ஐடியா உள்ளே

நாட்டில் இருக்கும் பலர் தற்போது பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தாலும், தங்களுக்கென்று ஒரு சுய தொழில் இருக்க வேண்டும் என ஒருமுறையாவது நினைத்திருப்பார்கள். அதிலும் சிலருக்கு பெட்ரோல் பங்க் திறக்க வேண்டும் என்ற சிந்தனையும் வந்திருக்கும்.
அப்படி நீங்களும் பெட்ரோல் நிலையம் அமைக்க முடிவு செய்திருந்தால், அதற்கான முதலீடு, விதிகள் மற்றும் நிதி தேவைகள் பற்றி தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். பெட்ரோல் நிலையங்களை பொறுத்தவரை எரிபொருள் விற்பனை மூலம் மட்டுமின்றி, பலதரப்பட்ட சேவைகள் மற்றும் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமும் லாபம் சம்பாதித்து வருகின்றன.
பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் கிடைக்கும் கமிஷன், பொருட்கள் விற்பனை மற்றும் வாகனங்களுக்கான பராமரிப்பு சேவைகள் போன்றவை இதில் அடங்கும். பெட்ரோல் - டீசல் விற்பனையில் கிடைக்கும் கமிஷன், அதன் உரிமையாளர்களுக்கு லாபம் ஈட்டி தருகிறது.
ஆனால், சிலர் நினைப்பார்கள். எரிபொருளின் விலை உயர்ந்தால், பெட்ரோல் பங்க் உரிமையாளர் அதிக லாபம் ஈட்டுவார் என்று. ஆனால், அது உண்மை கிடையாது. அதாவது, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.3 முதல் ரூ.4 வரை உரிமையாளருக்கு கமிஷன் கிடைக்கிறது.
டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை கமிஷன் கிடைக்கிறது. மார்ஜின் குறைவுதான். ஆனால், அளவுதான் பெரியது. ஒரு சராசரி பெட்ரோல் நிலையம், மாதத்திற்கு 2 லட்சம் முதல் 3 லட்சம் லிட்டர் வரை எரிபொருள் விற்பனை செய்கிறது. இதன் மூலம் ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறது.
இதில், ஊழியர்களின் சம்பளம், மின் கட்டணம், பராமரிப்பு செலவுகள், வாடகை என அனைத்தையும் கழித்த பிறகு, நன்கு அமைந்த இடத்தில் இருக்கும் ஒரு பெட்ரோல் நிலையம் மாதத்திற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை நிகர லாபம் சம்பாதிக்க முடியும்.
பெட்ரோல் நிலையம் திறக்க என்ன தேவை..?: முக்கிய இடத்தில் நிலம் (பெரிய சாலை, நெருக்கடி இல்லாத பகுதி) இருக்க வேண்டும். முதல் முதலீடு சுமார் ரூ.70 லட்சம் முதல் ரூ.1.2 கோடி வரை இருக்க வேண்டும்.
IOCL, BPCL, அல்லது HPCL போன்ற அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் அனுமதி பெற வேண்டும். சிறிய லாபம். பெரிய விற்பனை. சரியான இடம். இதுதான் பெட்ரோல் நிலைய வியாபாரத்தின் வெற்றிக்கான சூத்திரம்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



