ஆட்சியமைக்க வருமாறு தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க அழைப்பு - பூ. பிரசாந்தன்

தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்வதற்கு பல்வேறு விட்டுக் கொடுப்பிற்கு மத்தியில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிழக்கு தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு விடுப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன் தெரிவித்தார்.
நேற்றையதினம் (08) மட்டக்களப்பில் உள்ள கட்சியின் பிரதான அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் படகு சின்னத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வழங்கிய ஆணைக்காக அந்த மக்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் 37 ஆசனங்கள் எமக்கு கிடைத்துள்ளது.
இதனை மக்கள் எமக்கு வழங்கிய பெரும் ஆணையாகவே நாம் பார்க்கின்றோம். அதனடிப்படையில் கிழக்கு மக்களுக்கு தனித்துவமான ஒரு அரசியல் குரல் தேவை என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
எமது கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது வாகரையில் ஏழு ஆசனங்களை பெற்றிருக்கின்றோம் அதே போன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலும் இரண்டு வட்டாரங்களை தம்வசப்படுத்தியதுடன் மண்முனை தென் மேற்கு பிரதேசத்தில் ஆறு ஆசனங்களைப் பெற்று கிழக்கு தமிழர் கூட்டமைப்பு முன்னிலையில் நிற்கின்றது. அந்த அடிப்படையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பிற்கு மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் தமிழர்களின் ஆட்சியினை உறுதிப்படுத்துவதற்காக இணைந்து செயற்படுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபையில் இருக்கின்ற எல்லைப் புற கிராமங்கள் இரண்டில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கின்றது.
அதனடிப்படையில் மக்களின் ஆணைக்கு கட்டுப்பட்டு தனிப்பட்ட அல்லது கட்சி விருப்பு வெறுப்பிற்கு அப்பால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அனைவரும் ஒருமித்து பயணிக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்த்தியிருக்கின்றார்கள். அதன் அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்வதற்காக அழைப்பு விடுக்கின்றோம். அவ்வாறு ஒன்றாக பயணிக்கின்ற போது கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று, ஏறாவூர்ப்பற்று, மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனை தென் எருவில் பற்று, மண்முனை தென் மேற்கு மற்றும் போரதீவுப்பற்று உள்ளூராட்சி மன்றங்களிலும் நாங்கள் ஆட்சியமைக்க முடியும்.
அதாவது தமிழர்களின் ஆட்சியை உறுதிப்படுத்தும் வாய்ப்பு இருக்கின்றது. பல்வேறு விட்டுக் கொடுப்பிற்கு மத்தியில் பயணிக்கின்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் இந்த கோரிக்கையினை ஏற்று இலங்கை தமிழரசுக் கட்சியினர் ஒன்றாக பயணிப்பதற்கு முன் வருவார்கள் என நம்புகின்றோம். ஏன் என்றால் 2015 ஆண்டு மாகாண சபை தேர்தலின் பின்னர் எமது கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் அவர்களினால் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தோம்.
மாகாண சபை ஆட்சியினை நடாத்துவதற்கு நாங்கள் உங்களுடன் சேர்ந்து பயணிப்பதற்கு உறுதியாக இருக்கின்றோம் ஆனால் அந்த கருத்தை நிராகரித்திருந்தார்கள். மீண்டும் 2018 வருடமும் சேர்ந்து பயணிக்க அழைப்பு விடுத்திருந்தோம் அதனையும் நிராகரித்திருந்தார்கள். அதன் அடிப்படையில் கிழக்கு மக்கள் நில, நிருவாக, பொருளாதார இருப்புக்களில் கிழக்கு மக்கள் பாதிக்கப்பட்டிருந்ததை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என நாங்கள் நம்புகின்றோம் என்றார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



