தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாகவும், தேசிய இனமாகவும் நிரூபிக்க வேண்டிய தருணம்!

அதிகாரத்தின் ஆரம்ப புள்ளியாகிய உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாகவும், தேசிய இனமாகவும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் மாணவர் ஒன்றியத்தால் இன்றையதினம் வெளியிடப்பட் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உலகெங்கிலும் அறியப்பட்ட இந்நூற்றாண்டில் நடாத்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை நினைவு கூறும் மே மாதத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான தமிழ்ச் சமூகத்திற்கான தெளிவூட்டல்.
தொடர்ச்சியாக ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து தமிழ் மக்களிடையே அரசாங்கத்தின் மீது நம்பிக்கை குறைவடைந்து இருக்கும் இந்நிலையில் உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்ள காத்திருக்கின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மாறி மாறி வரும் சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கத்தால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள்.
அந்த வகையில் என்.பி.பி முலாம் பூசப்பட்ட ஜே.வி.பி அரசும் அதற்கு விதிவிலக்கல்ல. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கட்சிகள் மீது கொண்ட அதிருப்தி தேசிய மக்கள் சக்திக்கு, தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கின்றது என்ற விம்பத்தினை அளித்திருக்கின்றது. இதனால் சிங்கள பௌத்த பேரினவாத கட்சி, தாம் தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் இலங்கையில் இனமுரண்பாடு இல்லை என்றும் சர்வதேச ரீதியில் கூறுகின்றது.
ஆனால் இவர்கள் ஆட்சி பீடம் ஏறி 06 மாதங்கள் கடந்திருக்கின்ற நிலையிலும் தமிழ் மக்களுக்கு வழங்கிய எந்தவொரு தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் என்றவர்கள் இன்று வரை ஒழிக்கவில்லை, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என்று கூறியவர்கள் இன்று வரை அதனை நீக்கவில்லை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலி வேதனைகளை அறிவோம் என்றவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் உட்பட பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித நீதியும் வழங்கவில்லை.
இன்றளவும் அரசியல் கைதிகள் முழுமையாக விடுதலை செய்யப்படவில்லை, நில அபகரிப்பும், சிங்கள பௌத்தமயமாக்கலும் தமிழர் நிலங்களில் தொடர்ச்சியாக இன்றளவும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது.
உயர் பாதுகாப்பு வலயங்கள் முழுமையாக அகற்றப்படவில்லை. இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொண்ட சுயநிர்ணய உரிமையின் அடிப்படையான தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீர்வை அரசாங்கம் வழங்க தயாரில்லை.
இவ்வாறான காலப்பகுதியில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தாங்கள் விட்ட தவறினை திருத்திக் கொள்வதற்கான ஒரு அரிய சந்தர்ப்பமே இது. அதிகாரத்தின் ஆரம்ப புள்ளியாகிய உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாகவும், தேசிய இனமாகவும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.
தென்னிலங்கை தரப்புக்களைப் புறக்கணித்து உங்களுடைய கிராமங்களில் உள்ள உங்களுக்கு நம்பிக்கையான, நேர்மையான இறந்தகாலத்தைக் கொண்ட தமிழ்த் தேசியம் சார்ந்தவர்களை உங்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது.
எம் மண்ணுக்காக உயிர் நீத்தவர்களினை நெஞ்சில் நிறுத்தி உங்கள் வாக்குகளை வழங்குங்கள் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகமாக கேட்டுக்கொள்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



