உலக சுகாதார தினம் இன்று!

உலக சுகாதார தினம் இன்று (07) அனுஷ்டிக்கப்படுகிறது. 'ஆரோக்கியமான தொடக்கம், நம்பிக்கையான எதிர்காலம்' எனும் தொனிப்பொருளில் இம்முறை உலக சுகாதார தினம் நினைவுகூறப்படுகிறது.
உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களின் சுகாதார உரிமைகள் இன்று கேள்விக்குறியாகியுள்ளன. அத்துடன் சுகாதார உரிமைகளை வென்றெடுப்பதிலும் பல சவால்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். உயிரிழப்புகள் மற்றும் அங்கவீனம் போன்றவற்றிற்கு நோய்கள் உட்பட இயற்கை அனர்த்தங்களும் காரணமாக அமைந்துள்ளன.
உலகின் பல நாடுகளில் இடம்பெற்று வரும் மோதல்கள் வாழ்வியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் உயிரிழப்பு, வலி, பட்டினி , உளவியல் துயரங்களை அதிகரித்துள்ளன. அது மாத்திரமன்றி பொருளாதார முன்னேற்றங்கள் கண்டுள்ள நாடுகள் மேற்கொள்ளும் படிம எரிபொருட்களின் பயன்பாட்டில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதுடன் காலநிலை அனர்த்தங்களும் உக்கிரமடைந்துள்ளன.
இதனால் சுத்தமான காற்றை சுவாசிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் சுவாச ரீதியான பல நோய்களுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். உலக சுகாதார ஸ்தாபனத்துடன் கைகோர்த்துள்ள நாடுகள் ஆரோக்கியமான சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக அங்கீகரித்துள்ளன. எவ்வாறெனினும் சுகாதார உரிமையை உறுதி செய்யும் சட்டங்கள் பல நாடுகளில் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.
இந்த சவால்களை கவனத்திற்கொண்டு இம்முறை உலக சுகாதார தினம் 'ஆரோக்கியமான தொடக்கம், நம்பிக்கையான எதிர்காலம்' எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகிறது. சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து இந்நாளில் மக்களுக்கு பரவலான விழிப்புணர்வுகளும் தெளிவூட்டல்களும் வழங்கப்படுவதுடன், ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் தொடர்பிலும் அறிவூட்டல்கள் வழங்கப்படுகின்றன.
பல தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் ஏற்படுவதில் எமது சுகாதாரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உலகளாவிய சுகாதார பிரச்சினைகளை இதன்போது விசேடமாக கலந்துறையாடப்படுகின்றது. அந்தவகையில் மன நல ஆரோக்கியம், தாய் சேய் நலன், சிறுவர்களின் ஆரோக்கியம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டது, அந்தவகையில் இவ்வருடமும் தாய் சேய் நலன் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட உள்ளதுடன் வருடமுழுவதும் இதுதொடர்பான விழிப்புணர்வுகள் வழங்கப்பட உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
”ஆரோக்கியமான தொடங்கங்கள் நம்பிக்கைக்குறிய எதிர்காலங்கள்” என்ற விசேட தொனிப்பொருளுக்கமைய உலக சுகாதார தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டதுடன், இத்தொனிப்பொருளுக்கமைய பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட உள்ளது.
பிரசவத்தின் போது உயிரிழக்கும் தாய்மார் மற்றும் சிசுக்களின் மரணத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை துரிதப்படுத்தவும், பெண்களின் நீண்டகால ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை முன்னிலைப் படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் உலக சுகாதார ஸ்தாபனம் அரசாங்கத்தையும் சுகாதார நிறுவனங்களையும் வலியுறுத்தியுள்ளது. கர்ப்பகால ஆரோக்கியத்தையும் பிரசவத்திற்கு பின்னரான ஆரோக்கியம் தொடர்பில் அனைவரும் மிகுந்த கரிசனையுடன் செயற்பட வேண்டும்.
துரதிஷ்டவசமாக வருடாந்தம் உலகளாவிய ரீதியில் கர்ப்பகாலம் மற்றும் பிரசவத்தின் போது 300 இலட்சம் பெண்கள் உயிரிழக்கின்றனர். அதேநேரத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பிறந்த முதல் மாதத்திலேயே உயிரிழக்கின்றனர், மேலும் சுமார் 2 மில்லியன் குழந்தைகள் இறந்து பிறக்கின்றன.
அந்தவகையில் ஒவ்வொரு 7 வினாடிக்கு ஒரு தடவை கர்ப்பம், பிரசவம் காரணமாக மரணம் சம்பவிக்கிறது. ஆகையால் இத்தகைய மரணங்களின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு மகப்பேறு சிக்கல்கள் மாத்திரமல்லாது, மன ஆரோக்கியம், தொற்றா நோய்கள் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு ஆகியவை தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




