மருத்துவ தவறினால் குழந்தையையும், மனைவியின் கர்ப்பப் பையையும் இழந்து நிற்கின்றேன்! கணவன் ஆதங்கம்

ஒரு வருடத்திற்கு முன் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட எனது மனைவிக்கு பிறந்த குழந்தை இறந்ததோடு, மனைவியின் கர்ப்பப் பையும் அகற்றப்பட்ட சம்பவம் மருத்துவ தவறுகளினால் இடம்பெற்றது.
ஆனால் இன்று எனக்கு அதற்காக எந்த நீதியும் கிடைக்கவில்லை என கிளிநொச்சி நாதன்குடியிருப்பு திட்டத்தைச் சேர்ந்த இ.சுரேஸ் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வருடம் ஒன்றாகிறது ஆனாலும் இதுவரை எந்த நீதியும் கிடைக்கவில்லை.
மருத்துவ தவறு காரணமாக எனக்கு பிறந்த ஒரேயொரு குழந்தையையும், மனைவியின் கர்ப்பபையும் இழந்து ஆண்டு ஒன்றாகிறது. எனக்கு இழைக்கப்பட்ட இந்த மோசமான அநீதி தொடர்பில் நான் இதுவரை பொலிஸ் நிலையம், மனித உரிமைகள் ஆணைக்குழு, சுகாதார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் என பல தரப்பினர்களிடமும் முறையிட்டேன்.
முறைப்பாடு கிடைத்ததாக பதில் கிடைத்ததே தவிர எனக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. குருக்கள் செய்தால் குற்றமில்லை என்பது போல மருத்துவ தவறுகளும் குற்றமில்லாத நிலைமையே இங்கு காணப்படுகிறது. என் வாழ்க்கையில் இனி ஒரு குழந்தை இல்லை, என் இளம் மனைவி இனி மேல் தாயாக முடியாது.
சில மருத்துவர்களின் அலட்சியம், கவனக்குறைவு, படித்தவர்கள் என்ற மமதையில் ஏழை நோயாளிகளின் வார்த்தைகளை செவிமடுக்காமை போன்ற காரணங்களால் ஏற்படுகின்ற அநீதிகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்பது பெரும் கவலையே.. எனக்கு பிறந்த குழந்தையையும் இழந்துவிட்டேன்.
சரி நாம் இருவரும் இளம் கணவன் மனைவி எனவே இனியொரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிம்மதி அடையும் முன்னே மனைவியின் கர்ப்ப பையும் அகற்றப்பட்ட செய்தி இடியாய் விழுந்தது. நாம் இருவரும் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
எங்கள் வாழ்க்கையினை இழந்துவிட்டதாகவே உணர்கின்றோம். பிள்ளைகள் தொடர்பில் எங்கள் ஆசைகள்,கனவுகள், எல்லாமே தகர்க்கப்பட்டுவிட்டது. எம் இருவரின் வாழ்க்கையும் சூனியமாகிவிட்டது. பிள்ளையும் இல்லை, மனைவியின் கர்ப்ப பையும் இல்லை நீதியும் இல்லை.
ஏழைகளுக்கு நீதி எட்டாக்கனி என்பது அனுபவத்தால் புரிந்துகொண்டேன். சட்டம் அனைவருக்கும் சமமானது என்பது பச்சைப் பொய் என்பதனையும் உணர்ந்துகொண்டேன்.
இந்த ஒருவருடமாக நானும் மனைவியும் அனுபவிக்கும் வேதனையும், மன உளைச்சலும் இனி எவருக்கும் ஏற்படக் கூடாது என்றே கடவுளிடம் வேண்டுகிறேன். மருத்துவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் அவர்கள் அதனை தொடர்ந்தும் காப்பாற்ற வேண்டும் என்றார்.



