சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம்: முழு விபரம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆதரவளித்தும் -மருத்துவ மாபியாக்களை வெளியேற்றக் கோரியும் 08/07 திங்கட்கிழமை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் காண்டீபன் நியமிக்கப்பட்டு பின்னர் அவர் மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றிருந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரால் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் 38வயதான பதில் அத்தியட்சகர் அர்ச்சுனா நியமனம் கிடைத்து ஓரிரு நாட்களிலேயே சடுதியாக வைத்தியசாலையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வைத்தியசாலையை முன்னேற்றவும்-பொதுமக்களுடைய குறைபாடுகளை பூர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுத்திருந்தார்.
இந்த முடிவு வைத்தியசாலையின் ஒரு சில வைத்தியர்களுக்கு ஏற்புடையதாக தென்படாமையால் பதில் வைத்திய அத்தியட்சகருடன் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.
இந்த முரண்பாடு வளர்ந்து கடந்த நான்கு தினங்களாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் மருத்துவ சேவையில் இருந்து விலகியிருந்தனர். அவ்வாறு மருத்துவர்கள் கடமையில் இருந்து விலகியதில் இருந்து பதில் வைத்திய அத்தியட்சகர் தனி ஒருவராக வைத்தியசாலையை நிர்வகித்து மக்கள் மனங்களில் இடம்பிடித்திருந்தார்.
இருப்பினும் பதில் வைத்திய அத்தியட்சகான வைத்தியர் அர்ச்சுனாவை மாற்றி புதிய பதில் வைத்தியரை நியமிப்பதற்கான பெரு முயற்சியில் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் ஈடுபட்ட நிலையில் தென்மராட்சி மக்கள் 08/07 திங்கட்கிழமை வர்த்தக நிலையங்களை மூடியதுடன்-வைத்தியசாலை முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது வீதிமறியல் போராட்டத்திலும் பொதுமக்கள் ஈடுபட்டமையால் சில நிமிடங்கள் ஏ9வீதி ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.
இதன்போது பொதுமக்கள்;
5நாட்களாக கடமையில் இருந்து விலகிய வைத்தியர்கள் வேண்டாம்; வைத்தியர் அர்ச்சுனா எமக்கு வேண்டும்; மருத்துவ மாபியாக்களை வெளியேற்று; அரச வைத்தியசாலையில் நியமனம் பெற்றுவிட்டு தனியார் வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர்களை வெளியேற்று; நோயாளர்களின் நலன் கருதாது சுயநலமாக செயற்பட்ட வைத்தியர்களை இடமாற்று போன்ற கோஷங்களை எழுப்பியிருந்தனர்.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்றுகூடி வைத்தியர் அர்ச்சுனாவிற்காக ஆதரவளித்து போராடிவரும் நிலையில் விசேட அதிரடிப்படையினர்,கலகம் அடக்கும் பொலிஸார் என ஏராளமான பாதுகாப்புத் தரப்பினர் குவிக்கப்பட்டிருப்பதனால் சாவகச்சேரியில் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை இரவு தொடக்கம் தொடர்ச்சியாக பொதுமக்கள்,மக்கள் பிரதிநிதிகள்,பொது அமைப்புக்கள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது



