முடங்கியது சாவகச்சேரி: வைத்தியருக்கு ஆதரவாக அதிகாலையில் இருந்து ஆர்ப்பாட்டம்! பொலிஸார் குவிப்பு

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் கடையடைப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டமானது இன்று சாவகச்சேரி பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னேற்றத்தை வலியுறுத்தியும், வைத்திய பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடாத்தப்படுகின்றது.
சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரை பதவி நீக்கம் செய்து, கைது செய்ய முயற்சிப்பதாக நேற்றிரவு வெளியான தகவலை அடுத்து, பொதுமக்கள் வைத்தியசாலை வளாகத்தில் கூடிய நிலையில், நேற்று நள்ளிரவு அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
இந்த நிலையில், அதிகாலை முதல் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதுடன் மக்கள் அணிதிரண்டு அமைதியான வழியில் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



