சாவகச்சேரி வைத்தியசாலையில் பல்வேறு குளறுபடிகள் இருந்துள்ளன: சுகாஷ்

சாவகச்சேரி வைத்தியசாலையில் பல்வேறு குளறுபடிகள் மற்றும் நிர்வாக சீரின்மை இருப்பதாக தெரிவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய நேற்றிரவு வைத்தியசாலை வளாகத்திற்கு பொலிஸார் சென்றிருந்தனர். இந்தநிலையிலேயே சுகாஷ் நேற்றிரவு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு நேரடியாக சென்று அங்கிருக்கும் நிலைமைகளை பார்வையிட்ட பின்னர் இவ்வாறு தெரிவித்திருந்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஆயிரக்கணக்கான மக்கள் குழுமி இருந்தார்கள் வைத்தியர் அர்ச்சுனாவை அவர்களை கைது செய்யப் போவதாக 75க்கும் அதிகமான பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்தார்கள் ஆனால் தற்சமயம் அவரை கைது செய்யப்போவதில்லை என்றும் இன்று விசாரணைக்காக அவரை அழைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
வைத்தியசாலையிலே பல்வேறுபட்ட குளறுபடிகளும் நிர்வாக சீரின்மைகளும் இருப்பதை எங்களால் உணர முடிகிறது. அமைச்சர்கள் ஜனாதிபதிமார், பிரதமர், சுகாதார அமைச்சர் உட்பட வசதிப்படைத்தோர் தனியார் வைத்தியசாலையையே நாடிச் செல்கின்றனர்.
நடுத்தர வர்க்கங்களும் ஏழை மக்களுமே அரசாங்க வைத்தியசாலையை நாடிச்செல்கின்றனர். ஆகவே உடனடியாக தரமான சுகாதாரமான மருத்துவ வைத்திய வசதிகள் சாவகச்சேரி வைத்தியசாலையில் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வேண்டி நிற்கின்றோம் என தெரிவித்தார்.



