சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் : கூட்டாக அணித்திரளும் பொது அமைப்புகள்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மீள் எழுச்சிக்காக ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில் நாளைய தினம் (08.07) தென்மராட்சியில் பூரண ஹர்தல் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக இடம்பெறுகின்ற கண்டன எதிர்ப்பு போராட்டத்திற்கும் தென்மராட்சி சமூக பொது அமைப்புகளின் ஒன்றியம் பூரண ஆதரவை வழங்குவதோடு குறித்த போராட்டத்தில் அனைவரும் பங்கேற்பார்கள் என கூட்டாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், கடந்த காலங்களில் எமது மண்ணில் இடம்பெற்ற அனைத்து போராட்டங்களுக்கும் தென்மராட்சியில் உள்ள ஒவ்வொரு சமூக மற்றும் பொது அமைப்புகள் அனைத்தும் தனித்தனியாகவே எமது ஆதரவை தெரிவிப்பது வழமை.
ஆனால் நாளை முன்னெடுக்கப்படுகின்ற போராட்டமானது மனிதாபிமானத்தையும் எமது மக்கள் அனைவரினதும் இலவச சிகிச்சை உரிமையையும் வலியுறுத்தி முன்னெடுக்கப்படுவதால் தென்மராட்சியில் உள்ள அனைத்து சமூக பொது அமைப்புகள் ஆகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டாக ஆதரவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
எனவே தென்மராட்சியில் உள்ள சிறிய வியாபாரிகள் முதல் பாரிய வர்த்தகர்கள் மற்றும் அனைத்து தொழில் அமைப்புகளும் பூரண பங்களிப்பை வழங்குவோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளனர்.



