சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்துவது தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடித்தலை கட்டுப்படுத்துதல் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்றைய தினம் (06.07) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் பல படகுகள் மின் விளக்கினை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதனால் பல ஆயிரம் கிலோவில் மீன்களை பிடிக்கின்றார்கள்.
இதனால் சாதாரன மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மீன்வளம் அழிக்கப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் ஆகியோரால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரப்பட்டமைக்கு அமைவாக இன்றையதினம் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் திணைக்களத்தினர், கடற்படை இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து சட்டவிரோத மீன்பிடித்தலை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான தொடர்ச்சியான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட கடற்படைத் தளபதி, மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி, மாவட்ட இராணுவ அதிகாரி, கடற்படை அதிகாரிகள், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், மீனவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.



