சாவகச்சேரி வைத்தியசாலையில் டக்ளஸ் தேவானந்தாவை சூழ்ந்த பொதுமக்கள்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வைத்தியசாலைக்கு இன்று (06.07) நேரடியாக சென்றிருந்தார்த.
இதன்போது வைத்திய அத்தியட்சகருடன் வைத்தியசாலை நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தார்.
அத்துடன் வைத்தியசாலையை மேம்படுத்த தன்னால் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளின் போது ஒரு சில வைத்தியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இன்று வைத்தியசாலையை இவ்வாறானதொரு இக்கட்டான நிலைமைக்கு கொண்டு சென்றிருப்பதாகவும், வைத்தியர்களின் பணிப் புறக்கணிப்புக் காரணமாக கடந்த 24 மணித்தியாளங்களாக தனி ஒரு வைத்தியராக நின்று வைத்தியசாலையை இயங்க வைத்து நோயாளர்களை காப்பாற்றி வருவதாகவும் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா அமைச்சரிடம் எடுத்துக்கூறினார்.
இதனைவிட வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் சத்திர சிகிச்சைக் கூடம் ஆகியவற்றை இயங்க வைக்கக்கூடிய சாத்தியப்பாடுகள்,ஆளணி காணப்படுவதாகவும் வைத்திய அத்தியட்சகர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையில் ஒன்றுகூடிய பொதுமக்கள், வைத்தியசாலையை இன்று(06) இரவுக்குள் வழமை போன்று இயங்க வேண்டும், இல்லையேல் மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை இலங்கையில் நிலவிவரும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக பல வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு காணப்படுகிறது.
ஏறக்குறைய 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பரீட்சைகளை எழுதி சித்தியடைந்துள்ளதுடன், அவர்கள் விரைவில் வெளியேறுவார்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் எதிர்காலத்தில் பாரிய அளவில் வைத்தியர்களுக்கான பற்றாக்குறை ஏற்படும் எனவும் சுகாதார சேவையை தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் சிக்கல் நிலை தோன்றும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



