சாவகச்சேரி வைத்தியசாலையில் நடப்பது என்ன? வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்டது பழியா?

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக குழப்ப நிலையொன்று உருவாகியுள்ளது. இந்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வெளியிட்ட காணொளியொன்று தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் உயர் படிப்புக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பணிபுரியும் சில வைத்தியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதனால் வைத்தியசாலைக்கு சென்ற மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இந்த நிலைமையை விசாரிப்பதற்காக பிரதேச மக்கள் வைத்தியசாலை பணிப்பாளரை சந்திக்க சென்ற போது அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வைத்தியசாலை பணிப்பாளரை சந்திப்பதற்கு சென்ற மக்களுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான குழுவினர் அவதானிப்பு விஜயம் ஒன்றை இன்று மேற்கொண்டிருந்தனர்.
பொதுமக்கள் தமக்கான சேவைகளை பெற்றுகொள்வதில் இடர்பாடுகளை சந்திப்பதாக அலுவலகத்துக்கு கிடைத்த தொலைபேசி முறைப்பாடுகளுக்கு அமைய அக் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக சமூக பொருளாதார சமூக உரிமைகளில் ஒன்றான சுகாதார உரிமைகளை மக்கள் அனுபவிப்பதை, அணுகுவதை உறுதி செய்யுமுகமாக இந்த களவிஜயம் அமைந்திருந்தது.
குறிப்பாக இன்றையதினர் விடுதிகளில் நோயாளர்கள் எவரும் தங்கி சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கவில்லை என்பது தொடர்பில் எமது கவனம் செலுத்தப்பட்டது.
இதேவேளை சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற நிர்வாக முறைகேடுகள் பற்றி உரிய விசாரணை செய்ய ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும், தகுதி நிலை வைத்தியர்கள் தமது பணிகளை இடையூறின்றி செய்ய உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.



