தமிழ் பொது வேட்பாளர் களமிறங்குவது உறுதி!

#SriLanka #Election #Tamil People
Mayoorikka
1 month ago
தமிழ் பொது வேட்பாளர் களமிறங்குவது உறுதி!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பொது வேட்பாளரை நிறுத்தக்கூடாது என வடக்கில் உள்ள பிரதான தமிழ்க் கட்சியின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்த போதிலும், பொது வேட்பாளரை களமிறக்க சிவில் சமூகத்திற்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாக ஐந்து தமிழ் கட்சிகள் அடங்கிய கூட்டணியின் பிரதிநிதி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு அரசியல் கட்சியை ஏற்பாடு செய்வதற்கும் தயாராக இருப்பதாக தமிழ் மக்கள் கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவிக்கின்றார். “பொது வேட்பாளர் என்பது சிவில் சமூகம் நிறுத்துவதற்கு முயற்சி எடுக்கின்றார்கள். 

நாங்கள் ஆறு கட்சிகள் அதனை ஆதரிக்கக்கூடிய நிலைமை இருக்கிறது. இலங்கை தமிழரசுக் கட்சியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர. ஆகவே அவர்களுக்கு போட்டியிடுவதற்கு அவர்களுக்கு ஒரு கட்சியை ஏற்பாடு செய்து கொடுப்பதுகூட பிரச்சினையாக இருக்காது.”

 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தற்போது 5 அரசியல் கட்சிகளைக் கொண்ட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் (DTNA) இணைந்து செயற்படுகின்றார். மஹிந்த ராஜபக்ச இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட 2010 தேர்தலில் தமிழ் வேட்பாளராக சிவாஜிலிங்கம் போட்டியிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் பொது வேட்பாளரை நிறுத்த விருப்பம் தெரிவித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் வேறு எந்த ஒரு பொது வேட்பாளரும் நியமிக்கப்பட முடியாத நிலைமை ஏற்படும் பட்சத்தில், தான் பொது வேட்பாளராக களமிறங்குவது உறுதி எனவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

 “ஆகவே கடைசி நேரத்தில் ஒரு வேட்பாளர் நியமிக்க முடியாமல் போனால், ஆகக்குறைந்தது கடைசி ஆளாக தமிழ்த் தேசிய பரப்பிலே நான் களமிறங்குவேன். அதற்கு என்ன விலை கொடுத்தாலாவது, இனிமேல் நான் எந்த தேர்தலிலும் போட்டியிடமாட்டேன் என அறிவித்துவிட்டும்கூட, கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் எவ்வித பிரச்சினை ஏற்பட்டாலும் அதனை நான் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கின்றேன்.

” எம். கே. சிவாஜிலிங்கமும் பங்கேற்ற மக்கள் மன்றில் 'ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை' பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும் எனும் தலைப்பில், ஜூன் 9ஆம் திகதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்ற கலந்துரையாடலில், இலங்கை தமிழ் அரசு கட்சி எம்.பி, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுத் தமிழ் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டால் அதற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.

 அந்த சவாலை எதிர்கொண்டு தமிழ் மக்கள் கட்சியின் செயலாளர் சிவாஜிலிங்கம், ஜூன் 11ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுமந்திரனுக்கு பதிலளித்திருந்தார். “தமிழ் பொது வேட்பாளராக சிவாஜிலிங்கம் களமிறங்குவார். பொது வேட்பாளர் இல்லை என்ற நிலைமை ஏற்படாது என்பதை சுமந்திரனுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.” தந்தை செல்வா மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் உரையாற்றிய அதே பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே தானும் பொது வேட்பாளருக்கும் எதிரானவன் அல்ல என தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் வடமாகாண சபைத் தவிசாளருமான சி. வி. கே. சிவஞானம் தெரிவித்திருந்தார்.

 நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் செயலாளராகவும் செயற்படும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, நாட்டின் பெரும்பான்மை மக்களுக்காக மாத்திரமே அரச தலைவர் செயற்படுகிறார் என சுட்டிக்காட்டுவதோடு, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில், டெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், ஜனநாயகப் போராளிக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் கட்சி ஆகியன அங்கம் வகிக்கின்றன.