OMP அலுவலகத்தில் பதவி வெற்றிடம் : விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
OMP அலுவலகத்தில் பதவி வெற்றிடம் : விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

செயற்பட ஆரம்பித்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் காணாமல் போன (காணாமல் ஆக்கப்பட்ட) ஒருவருக்குக்கூட என்ன நடந்தது என்பதை கண்டறியத் தவறியுள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலமான, 2018 பெப்ரவரி மாதம், பணிகளை ஆரம்பித்த குறித்த அலுவலகமானது, காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரைக்கூட இதுவரை கண்டுபிடிக்கவில்லை அல்லது அவருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடக்கு, கிழக்கின் தாய்மார் முன்வைத்து வருகின்றனர்.  

இந்த நிலையில் அலுவலகத்தின் பதிவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  

நிகழ்வும் கண்டறிதல் அல்லது நுண்ணாய்வு, மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனிதாபிமான பதிலிறுப்பு ஆகிய துறைகளில் முன்னனுபவம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  

மேலும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பணிகளை நிறைவேற்றுவதற்கு இணையான தகைமைகளைக் கொண்டவர்களும் விண்ணப்பிக்க முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.  

இலங்கை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் காணப்படும் துரித இணைப்பின் ஊடாக விண்ணப்பத்தைப் பெற்று மின்னஞ்சல் அல்லது தபால் மூலமாக மே 27ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பதவி வெற்றிடம் குறித்த விளம்பரத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

காணாமல் போன பற்றிய அலுவலகத்தின் பெயரிலேயே சர்ச்சை காணப்படுவதாக தெரிவித்த பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் அலுவலகத்திற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.  

இறுதி யுத்தக் காலப்பகுதியிலும் அதன் பின்னரும் இலங்கை பாதுகாப்புத் தரப்பிடம் கையளிக்கப்பட்ட நிலையில் அல்லது சரணடைந்த நிலையில் காணாமல்போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது எனக் கேட்டு தாம் போராடுகின்ற நிலையில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் என்ற பெயரில் அலுவலம் ஒன்று இயங்குவதை விரும்பவில்லை என, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.  

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஜனவரி 4ஆம் திகதி யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காணாமல் போனோர் குறித்த முறைப்பாடுகளை விரைவில் விசாரணை செய்யுமாறும், அடுத்த ஆறு மாதங்களுக்குள் அந்த பணிகளை நிறைவு செய்ய காணாமல் போனோர் அலுவலகத்துடன் இணைந்து செயற்படுமாறும் வலியுறுத்தியிருந்தார்.