முல்லைத்தீவில் கடும் வறட்சி: விவசாயிகள் பெரும் பாதிப்பு

#SriLanka #Mullaitivu #Agriculture
Mayoorikka
2 weeks ago
முல்லைத்தீவில் கடும் வறட்சி: விவசாயிகள் பெரும் பாதிப்பு

தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக சிறிய நீர்ப்பாசனக் குளங்களில் நீர்வற்றிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

 இதனால் சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கைகள் வரட்சியால் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

 குறிப்பாக முள்ளியவளை கமநலசேவைநிலையப்பிரிவில், முள்ளியவளை தெற்கு, முள்ளியவளை மத்தி கமக்காரஅமைப்புக்களின்கீழ் உள்ள தொத்திமோட்டை மற்றும், தேன்தூக்கி ஆகிய சிறிய நீர்ப்பாசனக்குளங்களில் நீர் வற்றிப்போயுள்ளது. இதனால் குறித்த சிறிய நீர்ப்பாசனக்குளங்களின்கீழ் செய்கைபண்ணப்பட்டுள்ள 12ஏக்கர் சிறுபோகநெற்செய்கை நீர் இன்றி வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் சில விவசாயிகள் தமது நெற்செய்கையைக் காப்பாற்றும் நோக்கில் கிணற்றிலிருந்து நீர் இறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

 அதேவேளை உரியதரப்பினர் பாதிக்கப்பட்டுள்ள தமது நெற்செய்கைப் பார்வையிட்டு பாதிப்புக்களுக்குரிய நட்டஈடுகளை வழங்குவதுடன், குறித்த சிறிய நீர்ப்பானக் குளங்களை ஆழப்படுத்தி மறுசீரமைப்புச்செய்து தரவேண்டுமென்பதே விவசாயிகளின் கோரிக்கையாகவுள்ளது. இதுதொடர்பில் முள்ளியவளை கமநலசேவைநிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் பேரம்பலம் தயாரூபன் கருத்துத் தெரிவிக்கையில்,

 தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அதிகரித்த வெப்பத்துடன்கூடிய காலநிலை மாற்றம் காரணமாக தொத்திமோட்டை மற்றும், தேன்தூக்கி ஆகிய சிறிய நீர்ப்பாசனக் குளங்களில் நீர்வற்றிப்போயிருப்பதனால் அக்குளத்தின் கீழ் செய்கைபண்ணப்பட்டுள்ள நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 கமநல அபிவிருத்தித் திணைக்கள நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தில் குறித்த குளங்களை ஆழப்படுத்தி, குளத்தில் நீரை அதிகம் சேகரிக்கக்கூடியவாறு எம்மால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்தோடு வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கமநல காப்புறுதிச்சபையூடாக நட்டஈடுகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.