சமஸ்டி அடிப்படையிலான தீர்வைஅடைய இலங்கையினை வலியுறுத்துங்கள்!
தமிழ்மக்கள் 75 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற தமிழ்த்தேச அங்கீகாரத்தையும் அதனுடைய தனித்துவமான இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் முழுமையாக அனுபவிக்கக் கூடிய ‘சமஸ்டி' அடிப்படையிலான தீர்வினை அடைய இந்திய அரசும் ஏனைய நட்பு நாடுகளும் இலங்கையை வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் மேதினச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதினக்கூட்டம் வவனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
குறித்த மேதின பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது… தமிழ்மக்கள் காலம் காலமாக வழங்கிவரும் தமிழ்த் தேச அங்கீகாரத்துக்குரிய ஆணையை மீறி, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆம் திருத்தத்தையோ அல்லது ஒற்றையாட்சிக்குட்பட்ட வேறு எந்தவொரு தீர்வையோ தமிழினம் நிராகரிக்கிறது.
அந்த நோக்கில் தமிழர்களது நீண்டகால அரசியல் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் நிலையை உருவாக்குவதற்கு ஏதுவாக ஆட்சியாளர்கள் மீது அழுத்தங்களை ஏற்படுத்தும் முகமாக, நடைபெறவுள்ள சிறீலங்காவின் சனாதிபதித் தேர்தலை ஒட்டுமொத்த தமிழர் தேசத்து மக்களும் நிராகரிக்க வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம். தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்படவேண்டும்.

இனவழிப்பு யுத்தத்தால் அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கு ஈழத் தமிழ்த் தேசத்தை, போரால் பாதிக்கப்பட்ட பிராந்தியமாக பிரகடனம் செய்து, அத்தேசத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான விசேட நிதியேற்பாடுகள் செய்யப்படவேண்டும். அத்துடன் குறித்த செயற்திட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், முன்னாள் போராளிகள், பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள் போன்றோர் உள்வாங்கப்பட்டு அவர்களின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும். அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலையை வலியுறுத்துவதோடு, அச்சுறுத்தி, தமது உரிமைகளுக்காக போராடும் தரப்புக்களை சிறைக்குள் தள்ளி உரிமைகளை நசுக்க ரணில் அரசால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ அல்லது அதனையொத்த எந்தவொரு சட்டத்தையோ முற்றாக எதிர்க்கின்றோம். ஊடக சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் நசுக்கும் நோக்கில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் நீக்கப்படல் வேண்டும். சட்டத்திற்கு புறம்பான கொலைகள் நிறுத்தப்படல் வேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதி நிலைநாட்டப்பட வேண்டும். தமிழ்த் தேசத்தின் விவசாயிகள், மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டும். அவர்களுக்குரித்தான நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும். தொழிலாளர்கள் ஒன்றுபட்டு செயற்படக் கூடிய அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். தோட்டத் தொழிலாளர்களது உரிமைகள் வழங்கப்படல் வேண்டும். கடற்தொழிலாளர்கள் தமது கடற்தொழிலை தத்தமக்குரிய கடற்பரப்பில் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்படவேண்டும். தென்னிலங்கை மீனவர்களது அத்துமீறிய மீன்பிடிச் செயற்பாடுகள் தடுக்கப்படல் வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கான உதவிகளும் மேற்கொள்ளப்படவேண்டும். அத்துடன் கடற்தொழிலாளர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவேண்டும். வெளிநாட்டு மீனவர்கள் எமது கடலில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படக்கூடாது. எமது கடற்பரப்பினுள் அத்துமீறும் இந்திய மீனவர்களது நடவடிக்கைகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.
அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் அதிகாரங்களைப் பறிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்படல் வேண்டும் என்பதுடன், அந்த அலுவலகத்திற்கு கணக்காளர் ஒருவர் உடனடியாக நியமிக்கப்படல் வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.