மே தினம்: மேன்மை மிக்க தினம்! எல்லோரும் ஒன்றுபடுவோம்

#SriLanka #may day
Mayoorikka
2 weeks ago
மே தினம்:  மேன்மை மிக்க  தினம்!  எல்லோரும் ஒன்றுபடுவோம்

மனித உழைப்பின்றி இந்த உலகில் எதுவுமே நிகழ முடியாது. இந்த உலகில் அனைத்தும் இயற்கையாக தோற்றுவிக்கப்பட்டவைகளாகும்.

 மனிதர்கள் வாழ்வதற்கும், இன்பம் – துன்பம் என்பவற்றை உணர்வதற்கும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் காரணமாக அமைந்தது, மனித உழைப்பே ஆகும். இவ் ‘உழைப்பு’ மனிதர்களை அடிமைப்படுத்தும் விலங்காக மாற்றமடைய வைத்துள்ளது என்பது, அக் காலப்பகுதிகளில் வெகுவாக விமர்சிக்கப்பட்ட விடயமாகும்.

 “உலகத் தொழிலாளர்களே உங்கள் உழைப்பு எனும் பெரும் மூலதனத்தைக் கொடுத்து, அதற்குப் பிரதிபலனாக உங்களுடைய உரிமைகள் எல்லாவற்றையும் இழந்துவிட்டீர்கள். நீங்கள் இழப்பதற்கு கைவிலங்கைத் தவிர வேறொன்றும் இல்லை. 

அதே நேரம் நீங்கள் ஒன்றிணைந்தால், ஓர் பொன்னுலகம் எதிர்காலத்தில் சாத்தியப்படும்’’ என்று அறிவித்தவர் மார்க்ஸ். இதனைத் தொடர்ந்து முதலாளித்துவத்திற்கு எதிராக பல கிளர்ச்சிகள் அறிமுகமாக தொடங்கின. இதனடிப்படையில் 1986ஆம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி ஒரு நாளைக்கு 8 மணித்தியாலங்கள் மாத்திரமே வேலை செய்ய முடியும் என்ற கோஷத்துடன், ஐக்கிய அமெரிக்கவில் Hay Market Square என்ற இடத்தில் 40,000 க்கு அதிகமான தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து வீதிக்கு வந்தனர். 

இப் போரட்டத்தின் 3ம் நாள் இறுதியில், இனந்தெரியாத கூட்டத்தினரால் நிகழ்த்தப்பட்ட குண்டுத்தாக்குதல், தொழிலாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பாரியதோர் கலவரம் ஒன்றுக்கு வித்திட்டது. இதன் இறுதியில் 11 தொழிலாளர்கள் இறந்ததுடன் பலர் படுகாயமடைந்தனர். உலக வரலாற்றில் Hay Market Square விவகாரம் போன்றதொறு நிகழ்வொன்று தொழிலாளர் வர்கத்தினருக்கு ஆதரவாக இதுவரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே 1989 ஆண்டு முதல் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகின்றது.

 இலங்கையின் ஆரம்ப காலத்தில் மேலைத்தேய நாடுகளின் ஆதிக்கத்தினால் முதலாளித்துவ கோட்பாடுகள் அதிகம் பின்பற்றப்பட்டாலும், தொழிலாளர் வர்க்கத்திற்கு சார்பான நிகழ்வுகள் பல நிகழ்ந்துள்ளன. இலங்கையின் முதலாவது மே தின ஊர்வலம், 1927ம் ஆண்டு தொழில் சங்க தலைவரான குணசிங்க தலைமையில் நடைபெற்றது. இதில் ஆண்கள் கோடிட்ட சிவப்பு பெனியன்கள் மற்றும் வெள்ளை சாரன் அணிந்ததாகவும் பெண்கள் சிவப்பு நிற ஜாக்கட் அணிந்து, மேள தாள நடனத்துடன் தற்போதைய Price Park முதல் Galle Face Green மைதானம் வரை நடைப்பெற்றதாக சித்தரிக்கப்படுகின்றது. 

இதுவே 1956 ஆம் ஆண்டு S. W. R. D. பண்டாரநாயக்க பிரதம மந்திரி காலத்தில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. 1891 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி பிறந்த A. E. குணசிங்க, தொழிலாளர் வர்க்கத்திற்கு பாரிய சேவை செய்ததுள்ளார். இவரின் காலப்பகுதியிலேயே புகையிரத வேலைநிறுத்தம் மற்றும் துறைமுக வேலைநிறுத்தம் போன்ற வேலைநிறுத்தங்கள் நிகழ்ந்தன. அநேக வேலைநிறுத்தங்கள் தோல்வியில் முடிந்தாலும் ஆங்கிலேயருக்கு எதிராக முக்கியமான சில வேலைநிறுத்தங்களை வென்றுள்ளார் என்பதோடு, இவரே இலங்கையின் தொழிலாளர் இயக்கங்களின் தந்தையாக அறியப்படுகிறார்.

 இந்தியாவில் 1918ல் இருந்தே மே தின போராட்டம் உருவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த 6 மாதங்களுக்குள் பல்வேறு ஆலைகளிலும் தொழிலாளர் அமைப்புகள் உருவாகத் தொடங்கின. இதில் திருவிக, நடேச முதலியார் (நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவர்), சர்க்கரைச் செட்டியார் உள்ளிட்ட மெட்ராஸ் மாகாணத்தின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பலரும் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துணை புரிந்தனர்.

 நாளுக்கு நாள் அதிகரித்த தொழிலாளர் பிரச்னைகளும், அவர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், அரசியல் ரீதியாகவே இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற எண்ணம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் பல்வேறு தொழிலாளர் அமைப்புகளில் இடம் வகித்தவருமான சுப்ரமணிய ஐயருக்கு எழுந்தது. இதே எண்ணம் பரவலாக தலைவர்கள் மத்தியில் இருந்து வந்தது. 

இந்த நிலையில், 1922ஆம் ஆண்டு ஜூலை மாதம் மெட்ராஸ் அலுமினிய தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். இதை வழி நடத்தியவர் சிங்காரவேலர் என்ற கம்யூனிச சிந்தனை கொண்ட காங்கிரஸ்வாதி. இதற்கு முன்னதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் அருகே கடற்கரையில் அடிக்கடி தொழிலாளர்கள் கூட்டத்தை நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார் சிங்காரவேலர். 

இதன் விளைவாக, 1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிங்காரவேலரின் திருவான்மியூர் இல்லத்தில் பிரிட்டிஷ் இந்திய காவல்துறை சோதனை நடத்தியது. ஆரம்ப காலத்தில் தொழிலாளர் வர்க்கத்தை மையமாகக் கொண்ட மே தின ஊர்வலங்கள் நடத்தப்பட்டாலும், தற்போதைய காலப்பகுதியில் அரசியல் செல்வாக்கினை காண்பிக்கும் மேடையாக மாற்றம் பெற்றுள்ளதோடு, அரைப் போத்தல் மதுபாணத்திற்கும், 1000 ரூபாய் பணத்திற்கும் கட்சிகளுக்கு ஜால்ரா அடிக்கும் கூட்டமாக எம் மக்கள் மாறியுள்ளனர் என்பது வேதனை அழிக்கின்றது. 

 அதோடு அரசு விடுமுறை; தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள்; தியேட்டரில் அலைமோதும் கூட்டம்' தொழிலாளர் தினத்தில் இவைமட்டுமே கொண்டாட்ட அறிகுறிகளாகிவிட்டது என்பதும் வேதனை தரும் விடயமே. 

 இந்த உலகில் முதலாளிகள் என்று யாருமில்லை, நாம் செய்யும் முதலீடுகள் எதுவாயினும் இந்த இயற்கையிலிருந்து எடுக்கப்பட்டதே!

 நம் அனைவருக்கும் ஒரே முதலாளி, இயற்கை மட்டும்தான். எனவே முதலாளித்துவம், சம உடமை போன்ற கோட்பாடுகளை புறந்தள்ளிவிட்டு, கூட்டுறவுகள் மூலம் நாட்டை ஒன்றுபடுத்தி சிறந்ததோர் எதிர்காலத்திற்கு நான், நீ, என எல்லோரும் ஒன்றுபடுவோம்