கச்சதீவை மீட்க சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம்: இந்திய பிரதமரின் கருத்துக்கு இலங்கை பதிலடி

#SriLanka #D K Modi #kachchaitheevu
Mayoorikka
1 week ago
கச்சதீவை மீட்க சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம்: இந்திய பிரதமரின் கருத்துக்கு இலங்கை பதிலடி

இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார்.

 இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. 

அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. 

அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.

 அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். 

கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது.

 குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம்.

 அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார்.