ஆளில்லாத நிலத்துக்கான போர்!

#India #SriLanka #China #kachchaitheevu
Mayoorikka
1 month ago
ஆளில்லாத நிலத்துக்கான போர்!

இந்தியாவில் தற்போது தேர்தல் காலம்.

 இந்தியாவின் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு எதிர்வரும் (ஏப்ரல்) 19ஆம் திகதி ஆரம்பித்து ஜூன் மாதம் முதலாம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

 இந்தியாவை ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் தனது செல்வாக்கை ஆழப்பதிக்க பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. இதில் ஒன்றாகத்தான் கச்சதீவு விவகாரம் தற்போது கையாளப்படுகின்றது. 

தமிழ்நாட்டை ஆளும் கட்சியான தி. மு. க. மற்றும் இந்திய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிகள் 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணியாக தேர்தலை சந்திக்கின்றன. இந்தக் கூட்டணியை வீழ்த்தும் நோக்கிலேயே பா. ஜ. க. கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.

 கச்சதீவு...!

 ஆட்கள் எவருமற்ற சுமார் 285 ஏக்கர் பரந்துள்ள சிறு தீவு. இங்கிருக்கும் புனித அந்தோனியார் தேவாலயம் இலங்கை - இந்திய மக்கள் வருடத்தில் ஒருமுறை மட்டும் ஒன்றுகூடும் தலமாக உள்ளது. மற்றும்படி இந்தத் தீவில் இலங்கை கடற்படை முகாம் அமைந்துள்ளது. நெடுந்தீவிலிருந்து 10.5 கிலோமீற்றர் தொலைவிலும் இந்தியாவின் இராமேஸ்வரத்தில் இருந்து 12 கிலோமீற்றர் தொலைவிலும் அமைந்துள்ள இந்தத் தீவு யாருக்கு சொந்தம் என்பதில் நீண்டகாலமாகவே பிணக்கு நிலவியது.

 இரு நாடுகளிலும் ஒரே ஆட்சியாளர்களான ஆங்கிலேயர் காலத்திலும்கூட இந்தப் பிரச்னை நிலவியிருந்தது. இந்த நிலையில், சரியாக 50 ஆண்டுகள் முன்னால் - 1974ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் பரிமாறப்பட்டது. எனினும், கச்சதீவை மீளப் பெறுமாறு காலம்காலமாக தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி வந்துள்ளன. 

கச்சதீவை மீளப்பெறுவதற்கு அந்த அரசுகள் வலுவாக முன்வைத்த குற்றச்சாட்டு, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்படுவதும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும்தான். கச்சதீவு இலங்கை எல்லைக்குள் இருப்பதுதான் இவற்றுக்குக் காரணம் என்பதே அவர்களின் வாதமாக இருந்தது. ஆனால், இலங்கையின் மீன்வளத்தை குறி வைத்து - திட்டமிட்டே எல்லையை மீறிவரும் இந்திய மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்படுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் கைது செய்யப்படுவது கச்சதீவு கடற்பரப்பில் அல்ல. 

மாறாக நெடுந்தீவு, பருத்தித்துறை, காரைநகர், மயிலிட்டி மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்புகளில் - அதுவும் இந்தப் பகுதிகளின் கரைகளை மிகவும் அண்டியே இவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறான நிலைமையிலேயே கச்சதீவு விவகாரம் இந்திய பாராளுமன்றத் தேர்தலில் மிக முக்கியமான பேசுபொருளானது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டதன் மூலமே. 

எனினும், அவர் கச்சதீவை காங்கிரஸ் கட்சி இலங்கைக்கு வழங்கியது என்ற விடயத்தை வெளிப்படுத்தியிருந்தாரே தவிர, அதனை மீட்பது தொடர்பாக யாதொரு விடயத்தையும் தெரிவித்திருக்கவில்லை. எனினும், அவரின் இந்த கருத்து பல்வேறு விதமான கருத்து பேதங்களை இந்திய அரசியலில் - குறிப்பாக தமிழ்நாட்டு அரசியலில் கிளப்பியது. இதன் விளைவே கச்சதீவை மீளப்பெற வேண்டும் என்ற கோஷம் மீண்டும் வலுப்பெற அடிப்படையாக அமைந்தது.

 இந்த வலுவான கோஷமே இலங்கையின் அரசியல்வாதிகள் - மீனவர்கள் அதற்கு எதிர்வினையாற்றவும் வழிசமைத்தது. இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இலங்கையின் ஆட்சியாளர்கள் சீன சார்புநிலை நோக்கி அதிகம் சார்ந்திருந்தனர். இதனை, வலுவாகப் பற்றி இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் சீனா காலூன்ற முயற்சித்தது. சீனாவின் இந்த முயற்சி இந்து சமுத்திர மூலோபாய பாதுகாப்பில் பெரும் நெருக்கடியை இந்தியாவுக்கு ஏற்படுத்தியிருந்தது. இந்த சமயத்தில்தான் பெரும் பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டது.

 இதன்போது, ஆபத்பாந்தவனாக இந்தியா கணிசமான - சுமார் 450 கோடி டொலர்களுக்கும் அதிகமான உதவிகளை வழங்கியது. ஆனால், மறுபுறமோ சீனா இறுக்கமான நிலையை கடைப்பிடித்தது. இந்த இடைவெளியில் வடக்கு, கிழக்கில் தனது கண்காணிப்பை இறுக்கிக் கொண்டது இந்தியா. கிழக்கில் இந்திய வம்சாவளியினரான ஆளுநர் நியமனம், வடக்கில் நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவில் மின்சார உற்பத்தித் திட்டங்களை நிறுவும் திட்டங்களை அறிமுகப்படுத்தி தற்போது அந்தப் பணிகளை ஆரம்பித்தும் உள்ளது. இதேநேரத்தில் சீனா இந்து சமுத்திரத்தில் ஆராய்ச்சி என்ற பெயரில் உளவுக் கப்பல்களை அனுப்பியது. அவற்றுக்கும் இந்தியா தனது இராஜதந்திர செல்வாக்கு மூலம் இலங்கை கடலில் சீன ஆராய்ச்சி கப்பல்களுக்கு தடையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாகவே சீனா தொடர்ச்சியாக தனது ஆய்வு கப்பல்களை இலங்கையின் ஆள்புல எல்லைக்கு அண்மையாக நிறுத்தியது. 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா கடலில் தனது அக்னி ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது. நிலைமை இவ்வாறிருக்க வடக்கு - கிழக்கில் செல்வாக்கை செலுத்த முயன்ற சீனா அதில் ஆளுகை செலுத்த முடியாத நிலையில் இரு விடயங்களை கையாள்கின்றது. 

ஒன்று, இந்திய மீனவர்களின் அத்துமீறலால் பாதிக்கப்படும் இலங்கை - குறிப்பாக தமிழ் மீனவர்களை தனது வலைக்குள் வைத்திருக்க முயல்கிறது. இதேநேரம், கச்சதீவை குறிவைத்து தனது காய்களை நகர்த்தி வருகிறது. கச்சதீவு தொடர்பில் சீனா எத்தகைய அணுகுமுறையை கையாள முயறல்கிறது என்ற விடயம் வெளித்தெரியவில்லை. எனினும், கச்சதீவு குறித்து இந்தியா - இந்திய இராஜதந்திரிகள் வெளிப்படுத்தும் கருத்துகள் ஏதோ ஒரு மர்மத்தை உடைக்க முயல்கின்றன. யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவராக இருந்தவரும் இராஜதந்திரியுமான நடராஜன் “கச்சதீவில் கட்டப்பட்டுள்ள நிரந்தர கட்டமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் இந்திய தரப்பில் உள்ளது”, என்று அண்மையில் கூறினார். அவரின் இந்தக் கருத்து சீனா பற்றியதே என்பதை எவரும் இலகுவில் மறுத்துவிட முடியாது.

 இந்து சமுத்திர மூலோபய பாதுகாப்பில் தீவு நாடுகளான இலங்கை, மாலைதீவு அதிமுக்கியத்துவம் கொண்டவை. மாலைதீவுகளில் சீனா சார்பு கட்சியான முஹமட் முய்சு தலைமையிலான மக்கள் தேசிய காங்கிரஸ் ஆட்சிப் பீடமேறியதும் - அங்கு நிலைகொண்டிருந்த சுமார் 100இற்கும் குறைவான இந்திய இராணுவத்தை வெளியேற பணித்ததும் - மாலைதீவுகளின் பாதுகாப்பை சீனாவின் கைகளில் வழங்கியமையும் இந்து சமுத்திரத்தில் செல்வாக்கு பெற முனையும் சீனாவின் ஆதிக்கத்தை சற்று உயர்த்தியும் - அதே நேரம் இந்தியாவுக்கு பின்னடைவையும் அதேநேரம் - இந்து சமுத்திர மூலோபாய பாதுகாப்பில் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது. 

இவ்வாறான நிலையில், நடராஜனின் கூற்றை வெறுமனே புறமொதுக்கிவிட முடியாது. முன்னதாக யாழ்ப்பாணத்தின் தீவுகளில் காலூன்ற முயன்று பின்தங்கிய சீனா தற்போது ஆட்களற்ற - இந்தியாவுக்கு மிகச் சமீபமாக உள்ள கச்சதீவை ஏதோஒரு வகையில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்கிறது என்றே கருதலாம். இதேநேரத்தில், இந்தியா கச்சதீவின் மீதான தனது ஆதிக்கத்தை மீள உறுதிப்படுத்தவும் - இலங்கையை எச்சரிக்கவுமே இதை கையாள முயல்கிறது. இதேசமயத்தில் இந்திய அரசியலில், மிகச்சரியாக சொல்வதானால் தமிழ்நாட்டு அரசியலில் அதனை தனக்கு சாதகமாகவும் பயன்படுத்த முனைந்துள்ளார் இந்திய பிரதமர்.

 ஆக... ஆட்களற்ற தீவுக்காக இரு வல்லரசுகள் இராஜதந்திர போரை நடத்துகின்றன.