இனமுறுகலை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க வேண்டாம் - கிருபைராஜா!

ஈஸ்டர் தின தாக்குதலுக்கும் நீதி கிடைக்வில்லை கல்முனை வடக்கு பிரதேச மக்களுக்கும் நீதி கிடைக்கவில்லை எனவும் அரசு காலம் தாழ்த்தாது நீதியை பெற்றுத்தர வேண்டும் என போதகர் ஏ.கிருபைராஜா தெரிவித்தார்.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மிலேச்சத்தனமாக ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (31.03) மாலை கல்முனை கிறிஸ்தவ வாழ் மக்களினால் மேற்கொள்ளப்பட்டவேளை அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஐந்து வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மிலேச்சத் தனமாக ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத செயலுக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை உரிய நீதியை பெற்றுத்தரவில்லை. இவ்வாறு பல காரியங்களுக்கான நீதி இலங்கை அரசில் பின்னோக்கி இருக்கின்றது.
இனியும் காலம் தாழ்த்தாது நீதி கிடைக்கவேண்டும் என கல்முனை பிரதேச கிருஸ்தவ மக்கள் சார்பாக எங்கள் குரல்களை பதிவு செய்கின்றோம். நீதி மன்றங்களில் அதற்கான நீதியை விரைவாக கிடைக்க எதிர்பார்க்கின்றோம்.
இந்த கருத்தை பதிவு செய்துகொண்டிருக்கும் போது கல்முனை பிரதான வீதியில் இருந்து இன்னுமொரு மன வேதனையான விடயத்தையும் காண்கின்றேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை பொறுப்பு வாயந்த அதிகாரிகளிடம் இருந்தோ அரசிடம் இருந்தோ உரிய பதில் கிடைக்கவில்லை .
மக்கள் வெயிலிலும், மழையிலும் தங்கள் நீதிக்காக போராடி வருகின்றனர். இந்த மக்களின் கோரிக்கை நியாயமானது என்பது நாடறிந்த விடயம் இருந்தும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இந்த மக்களுக்கான நீதியும் மறுக்கப்பட்டு வருகின்றது.
கல்முனை வடக்கு பிரதேச மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் அரசாங்கத்தை அன்பாக கேட்டுக்கொள்கின்றோம். சில வருடங்களின் முன்பும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்பட்டபோது அரசாங்கத்தாலும் , அரச அதிகாரிகளாலும், மதகுருக்களாலும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் எதுவும் நடைபெறவில்லை.
இனங்களுக்கிடையில் பரிவினையை ஏற்படுத்தி கல்முனை வடக்கு பிரதேச மக்களுக்கு அநீதி செய்து இனமுறுகலை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு இடமளியாது இதற்குரிய தீர்வை அனைவரும் இணைந்து பெற்றுத்தர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.



