உள்ளுராட்சி தேர்தல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன!

கடந்த வருடம் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நான்கு மனுக்கள் இன்று (01.03) உச்ச நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த மனுக்களை ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய ஜன பலவேக, மாற்றுக் கொள்கை மையம் மற்றும் பெஃரல் அமைப்பு ஆகியன சமர்ப்பித்துள்ளன.
இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலவியதாகவும், அது தொடர்பில் நிதியமைச்சு மக்களுக்கு அறிவித்திருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், உள்ளூராட்சி சபைத் தேர்தலை சட்டத்தின் பிரகாரம், நடத்துவதற்கு இடையூறு ஏற்படும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் உள்ளதாக தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்தின் விதிமுறைகளை தேர்தல்கள் ஆணைக்குழு பின்பற்றவில்லை எனவும் தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை கேட்டுள்ளதாகவும் இது முற்றிலும் சட்டத்திற்கு முரணானது எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.



